

உத்தரபிரதேச மாநிலம் உயர்நிலை கல்வி வாரியம் சார்பாக 10, 12-ம்வகுப்புக்கான பொதுத் தேர்வு இந்திமொழிப் பாடத்தோடு நேற்று தொடங்கியது. 10-ம் வகுப்பில் 30 லட்சம் மாணவர்கள், 12-ம் வகுப்பில் 26 லட்சம் மாணவர்கள் என மொத்தம் 56 லட்சம் பேர் பொதுத் தேர்வை எழுதுகின்றனர். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களில் 20 லட்சத்து 789 பேர் தனியார் பள்ளி மாணவர்களாகும். அதேபோல், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 69 ஆயிரத்து 983 பேர் தனியார் பள்ளி மாணவர்களாகும்.
மார்ச் 6-ம் தேதி வரை நடைபெறும் தேர்வில் இந்த ஆண்டு பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலம் உத்தரபிரதேசம். இதனால், பள்ளிகளில் நடக்கும் பொதுத் தேர்விலேயே காப்பி அடிப்பது போன்ற அதிகப்படியான குழப்பம் ஏற்படும். இதனை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பாக பள்ளிக்கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, தேர்வு மையங்களை சிசிடிவி கேமரா, குரல் பதிவு மூலம் நேரடியாக கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களில்7,784 தேர்வு மையங்களில் சுமார்2 லட்சம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், 938 தேர்வு மையங்கள்பதற்றமானவை என்றும் 395 தேர்வுமையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும் கல்வி வாரியம் கண்டறிந்துள்ளது. இங்கு அதிகப்படியான குழப்பம் ஏற்படும் என்பதால் போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
பதற்றமான மாவட்டங்களில் உள்ளதேர்வு மையங்களில் வண்ண குறியிடப்பட்ட மற்றும் நூல்களால் கட்டப்பட்ட பதில் தாள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.10-ம் வகுப்புக்கு இளஞ்சிவப்பு, மஞ்சள்நிறமாகவும், 12-ம் வகுப்புக்கு பச்சை, நீலநிறமாகவும் பதில் தாள்கள் இருக்கும்.
மேலும், தேர்வு மையங்களில் பிரச்சினை ஏற்பட்டால் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க ஹெல்ப்லைன் எண்கள், மின்னஞ்சல் மற்றும் கட்டணமில்லா எண்கள் ஆகியவற்றை கல்வி வாரியம் அறிமுகம் செய்துள்ளது.`