Published : 19 Feb 2020 07:56 AM
Last Updated : 19 Feb 2020 07:56 AM

ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் கண்காணிப்பு: ‘மொபைல் ஆப்’ மூலம் அதிகாரிகள் பதிவு

சென்னை

தமிழகம் முழுவதும் உள்ள நடுநிலைப் அரசுப் பள்ளிகளில் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க புதிய அலைபேசி செயலியை அறிமுகப்படுத்த தமிழக கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பிக்கும் முறை மற்றும் மாணவர்கள் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் என்பதைச் சோதிப்பதற்கான திட்டம் இது. ஏற்கெனவே கடந்த அக்டோபர் மாதம் முதல்கட்டமாக சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் அப்சர்வேஷன் மொபைல் ஆப் (observation mobile app) அறிமுகப்படுத்தபடும் என்ற அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதும் இந்த திட்டம் கொண்டுவரப்படும் என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வகுப்பறைகளில் எவ்வாறு பாடம் நடத்துகிறார்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பறையில் எவ்வாறு கவனம் செலுத்துகிறார்கள் ஆகியவற்றை கண்காணிக்க கல்வித் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மூலம் வகுப்பறையில் கற்பிக்கும் வழிமுறைகள், மாணவர்களின் கற்றல் திறன், மாணவர்கள் கேட்கும் கேள்விகள், சந்தேகங்களுக்கு விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, பதிவேடு பராமரிப்பு, செயல்வழிக் கற்பித்தல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஆசிரியர்கள் தினமும் செயலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் மதிப்பீடு செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு தெரியப்படுத்துவர்.

பள்ளி ஆய்வின்போது இந்த செயலியில் பதிவேற்றப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் ஆசிரியர்களின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்படும். முதல்கட்டமாக, சோதனை அடிப்படையில் சென்னை, திருவண்ணாமலை மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் இந்த திட்டம் விரைவில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்ய மாவட்ட கல்வி அதிகாரிகள் வருகை புரியும் முறை ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இதில் டிஜிட்டல் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதன்பொருட்டு வகுப்பறையில் பாடம் எவ்வாறு கற்பிக்கப்படுகிறது என்பதையும் மாணவர்கள் பாடத்தை எவ்வாறு கிரகித்துக் கொள்கிறார்கள் என்பதையும் தாண்டிசெயல்வழிக் கல்வி முறையை ஊக்கப்படுத்தும் கியூஆர் கோட்பயன்பாடு, ஆசிரியர்கள் கற்பிக்க பாட உபகரணங்களுக்கான வழிகாட்டியான டி.எல்.எம்.TLM- Teaching Learning Material) இணைய பயன்பாடு ஆகியன சோதிக்கப்படும். இவை மட்டுமல்லாது பாடப்புத்தகங்களை தவிரவும் நூலகத்தில் உள்ள பிற புத்தகங்களை ஆசிரியர்கள் கற்பித்தலுக்கு பயன்படுத்துகிறார்களா என்பதும் கேட்கப்படுவதாக திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு இடைநிலைப் பள்ளி ஆசிரியர்கள் மூலம் தெரியவந்தது. வகுப்பறை செயல்பாடுகள் குறித்த பதிவுகள் முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாக செயலி வழியாக தகவல்கள் உடனுக்கு உடன் சென்றடைவதற்கான திட்டம் இது.

அப்சர்வேஷன் மொபைல் ஆப்-ஐசென்னை, திருவண்ணாமலை தவிரஇதர 30 மாவட்டங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் அனைத்து அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி மாநில திட்ட இயக்ககத்தால் அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x