Published : 18 Feb 2020 10:43 AM
Last Updated : 18 Feb 2020 10:43 AM

திசைகாட்டி இளையோர்-16: மாலைப் பொழுதிலே ஒரு சாலைப் பள்ளி

இரா.முரளி

“எனக்கு படிப்பு சொல்லித் தருவீர்களா?" அந்த ஏழைச் சிறுமியின் இந்தக் கேள்வியை ஷெரினும் அவள் அண்ணன் ஹாசனும் எதிர்பார்க்கவே இல்லை. பொதுவாக கராச்சி நகர வீதிகளில் பிச்சைதான் அம்மாதிரி சிறுவர்கள் கேட்பார்கள். இது அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஹாசனுக்கு அப்போது வயது 16. அவன் தங்கை ஷெரினுக்கு 14தான். பள்ளி நேரம்முடிந்து வீடு திரும்பும் வழியில்தான் இந்தஏழைச் சிறுமி அவர்களிடம் இப்படி கேட்டாள். கண்டிப்பாக இதை செய்தே ஆகவேண்டும் என்று இருவரும் முடிவெடுத்தனர். அந்த சிறுமிக்கு மட்டுமின்றி அவளுடைய நண்பர்கள் நான்கு பேருக்கும் சேர்ந்துமாலை நேரத்தில் வகுப்பு எடுக்கத் தொடங்கினர்.

தாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் இருந்த திறந்தவெளியில், மாலை நாலரை மணி முதல் ஆறு மணி வரை தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் ஏழை சிறுவர்களுக்கான இலவச வகுப்பை அவர்கள் ஆரம்பித்தார்கள்.

உணவுடன் கல்வி

இது பல ஏழைக் குழந்தைகளை ஈர்த்தது. ஆனால், அவர்களின் பெற்றோர்களுக்கு இதில் ஒப்புதல் இல்லை. பிழைப்பிற்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பது இதனால் கெட்டுவிடும் என கவலைப்பட்டார்கள். அவர்களை சம்மதிக்க வைக்கும் வகையில், தங்கள் வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளுக்குச் சிறப்பான ஊக்கத்தொகையும், சாப்பிட சிற்றுண்டியும் வழங்கதொடங்கினார்கள் ஹாசனும், ஷெரினும்.

சில குழந்தைகளுக்குப் போக்குவரத்து வசதிகளையும் செய்து தந்தார்கள். அதைத் தொடர்ந்து நடத்துவது முதலில் அவ்வளவுஎளிதாக இல்லை. இதற்காக தங்களுடைய பள்ளி படிப்பில் சில சமரசங்களைசெய்து கொண்டார்கள். மாலை நேரங்களில்விளையாட்டுகளில் ஈடுபடுவதைத் தியாகம் செய்தார்கள்.

இலக்கும் ஈடுபாடும்

தங்களின் மாலைநேர வகுப்பில் சேரும் சிறுவர்களை அவர்கள் தரையில் உட்கார வைக்க விரும்பவில்லை. அவர்களுக்கான நாற்காலிகள், மேஜைகள் என்று ஏற்பாடு செய்ய முனைந்தார்கள். ஹாசனும், ஷெரினும் தங்களுடைய பெற்றோரிடம் இதற்காக உதவி கேட்டபோது முதலில் அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

பின்னர் தங்கள் குழந்தைகளின் ஈடுபாடு நிஜமானது, தீவிரமானது என்பதைப் புரிந்து கொண்டார்கள். தங்களால் இயன்ற பண உதவியைச் செய்ய தொடங்கினார்கள். அதே போன்று பல நண்பர்கள், சில ஆசிரியர்கள் உதவ முன்வந்தார்கள். இவர்களின் மாலை நேர வகுப்பு மாலை நேரப் பள்ளியாக உருவெடுத்தது. சாலையோர பள்ளி என்று பெயர்பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக இப்பள்ளிக்கு மாணவர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

“ஆரம்பத்தில் அந்த சிறுவர்களுக்கு பென்சிலை கூட எப்படி பிடிக்க வேண்டும் என்பதுதெரியாது. ஓராண்டு கடந்தபின் இப்போதுஅவர்கள் ஒரு கட்டுரையையே எழுதுவார்கள்’’ என்கிறார் ஷெரின். “இங்கு சேர்ந்த புதிதில் இவர்களில் பலர் ஒழுங்கீனமாக நடந்துகொண்டார்கள். பின்னர் படிப்படியாக மாறத் தொடங்கினார்கள்’’ என்கிறார் ஹாசன்.

மாறிய நெஞ்சங்கள்

தெருவில் திரிந்து கொண்டிருந்த சிறுவர்கள் குற்றவாளிகளிடம் மாட்டிக் கொண்டு பிச்சை எடுத்தல், போதை மருந்துவிற்றல் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தார்கள். கராச்சி நகரில் ஹாசனும், ஷெரினும் பள்ளி தொடங்கிய பின், பல ஏழைச் சிறுவர்கள் பள்ளிக்கு வர தொடங்கினார்கள். சிறு குற்றங்கள் புரிவதில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்த தொடங்கினார்கள்.

இந்த மாற்றத்தைப் புரிந்து கொண்ட ஹாசனும், ஷெரினும் தங்கள் சேவையை இன்னும் தீவிரமாக்கினார்கள். இருவரும், தங்களிடம் பயிலும் சிறார்களுக்கு, நற்பண்புகளுக்கான முன்மாதிரியாக விளங்கினார்கள். இப்போது 250-க்கும் மேற்பட்ட சிறுவர்களும் பெரியவர்களும் இங்கு எழுதப் படிக்க வருகிறார்கள். அடிப்படை எழுத்து, வாசிப்பு, கூட்டல் கழித்தல் கணக்குகள் என கற்றுத் தரும் இவர்களின் பள்ளி தற்போது கராச்சி நகரத்தை தவிர வேறு இடங்களிலும் ஆர்வம் உள்ள நண்பர்களை கொண்டு விரிவடையத் தொடங்கிவிட்டது.

இவர்களின் இந்தச் சேவையை அடையாளம் கண்ட தைவான் நாட்டு அரசு, உலகளாவிய சிறந்த இளையோருக்கான விருதை 2016-ல் ஹாசனுக்கும், ஷெரினுக்கும் வழங்கி கவுரவித்தது. ஏழைச் சிறுவர்களுக்கு கல்வி வழங்கும் அதே வேளையில் இந்தியா பாகிஸ்தான் மக்களுக்கு இடையே நட்பும் நல்லுறவும் பலப்பட வேண்டும் என இந்த இளையோர் விரும்பினார்கள்.

இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவ வேண்டும் என்ற செய்தியை இந்தியாவிற்கு தெரிவிக்கும் வண்ணம், தங்கள் பள்ளிக் குழந்தைகளை அனைவரையும் இந்திய தேசிய கீதத்தை பாடச் சொல்லி, அதை இந்தியாவின் சுதந்திரத்திற்கான தங்கள் செய்தியாக அனுப்பினார்கள். அதை பதிவு செய்து தங்களுடைய இணையதளத்திலும் வெளியிட்டார்கள்.

பணத்தட்டுப்பாடு இருந்தபோதும் வெவ்வேறு தடைகள் இருப்பினும் அவற்றை எதிர்கொண்டு தற்போது பல ஆதரவாளர்களின் பங்களிப்போடு வீதிப் பள்ளியை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி வழங்கி வருகிறார்கள். என்ன கிளம்பிட்டீங்க? நீங்களும் உங்க பகுதியில் வழிகாட்டுதல் இல்லாமல் வீதியில் வாழும் சிறார்களுக்கு எழுதப்படிக்கத் சொல்லிக் கொடுக்கப் போறீங்களா?

கட்டுரையாளர்: பேராசிரியர், சமூக செயற்பாட்டாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x