Published : 18 Feb 2020 10:21 AM
Last Updated : 18 Feb 2020 10:21 AM

சுலபத்தவணையில் சிங்காசனம்-15: வானிலை விஞ்ஞானியாக வேண்டுமா?

மழை, வெயில், புயல், சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகளில் உங்களுக்கு அதீத ஆர்வம் உண்டா? இந்த இயற்கை நிகழ்வுகளை ஆராய்ந்து கணித்து முன்னறிவிப்பதில் விருப்பமா? அப்படி இருந்தால் நீங்கள் வானிலை விஞ்ஞானியாகலாம். எப்படி விஞ்ஞானியாவது?

வானிலை ஆய்வு மக்களின் அன்றாடவாழ்க்கையைத் தொடும் ஒரு அறிவியல்துறையாகும். வேளாண்மை சார்ந்தவானிலைத் தகவல்கள், விமானப்போக்குவரத்து சார்ந்த வானிலைத் தரவுகள், மழை-புயல்-வெள்ள எச்சரிக்கைகள், மீனவர்கள் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கான கடல் வானிலை அறிக்கைகள், பூகம்ப முன்னெச்சரிக்கை தகவல்கள், ராணுவத்துக்கான வானிலை எச்சரிக்கைகள் என பல தளங்களில் வாழ்வாதாரத்தையும், உடைமைகளையும், உயிரையும், நாட்டையும் காக்கும் முக்கிய பணியை செய்கின்றனர் வானிலை விஞ்ஞானிகள்.

வானிலை ஆய்வு மையங்கள்

இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் (Ministry of Earth Sciences) கீழ் செயல்படும், இந்திய வானிலை ஆய்வுத் துறை (Indian Meteorological Department) 1875-ல் தொடங்கப்பட்டது. சென்னை, கொல்கத்தா, குவஹாத்தி, மும்பை, நாக்பூர், புதுடெல்லி ஆகிய ஆறு நகரங்களில் வானிலை ஆய்வு மையங்கள் உள்ளன.

வானிலை விஞ்ஞானியாகும் வழிகள்

விஞ்ஞானி பணியிடங்களுக்கான அறிவிப்புகளை இந்திய வானிலை ஆய்வுத் துறை அவ்வப்போது வெளியிடும். இளநிலை பொறியியல் பட்டம் பெற்றவர்களும், முதுநிலை அறிவியல், பொறியியல், கணினி பயன்பாடு பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விஞ்ஞானி பணியிடங்கள் தவிர ஆராய்ச்சி உதவியாளர், இளநிலை மற்றும் முதுநிலை ஆய்வாளர் உள்ளிட்ட தற்காலிக ஆராய்ச்சி பணிகளுக்கும் வாய்ப்புகள் உண்டு. மேலும் விவரங்களுக்கு http://www.imd.gov.in/pages/recruits.php என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

எந்தெந்தப் பாடப்பிரிவுகள்?

இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் மின்னணு-தொலைத்தொடர்பியல், மின்னணு-கருவியியல், கருவியியல் (Instrumentation), கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கு வாய்ப்புகள் உண்டு.

அறிவியல் அல்லது பொறியியல் துறை சார்ந்த முதுநிலைப் பட்டங்களில், வளிமண்டல அறிவியல் (Atmospheric Science), வானிலையியல், கடலியல் (Oceanography), இயற்பியல், புவியியற்பியல் (Geo Physics), கணிதம், தொலைஉணர்தல் (Remote Sensing), கணினி பயன்பாடு, சுற்றுச்சூழல் அறிவியல், வேளாண்மை வானிலையியல், வேளாண்மைஇயற்பியல், வேளாண்மை புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், புவியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டம்பெற்றவர்கள் விஞ்ஞானியாக விண்ணப்பிக்கலாம்.

இத்துறைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் முதுநிலை விஞ்ஞானி பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். நேர்முகத் தேர்வின் மூலம் விஞ்ஞானிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வேலை வாய்ப்புகள்

இந்திய வானிலை ஆய்வு நிறுவனத்தில் விஞ்ஞானியாக சேரலாம். இத்துறையின் விஞ்ஞானிகள்தான் தொலைக்காட்சியில் வானிலைத் தகவல்களை தெரிவிப்பவர்கள். இதைத் தவிர விமான நிலையங்களின் வானிலை ஆய்வகங்கள், இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., தனியார் நிறுவனங்கள், செய்தி ஊடகங்களிலும் வேலைவாய்ப்புகள் உண்டு. சுயேச்சை வானிலை கணிப்பாளர்களும் (Independent weathermen) தற்போது இந்தியாவில் பெருகி வருகிறார்கள்.

(தொடரும்)

கட்டுரையாளர், ‘விண்ணும் மண்ணும்’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர். ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x