Published : 18 Feb 2020 08:27 AM
Last Updated : 18 Feb 2020 08:27 AM

செல்போன், மடிக்கணினியை அறிவு வளர்ச்சிக்கு பயன்படுத்துங்கள்: பள்ளி மாணவர்களுக்கு தருமபுரி ஆட்சியர் அறிவுரை

செல்போன், மடிக்கணினியை அறிவுவளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்என்று பள்ளி மாணவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவுரை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, வேலைவாய்ப்பு மற்றும்பயிற்சித்துறையும் சார்பில் தருமபுரிமாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான்கோட்டையில் உள்ள அதியமான் கோட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

தனித்திறனை கண்டறியுங்கள்

மாணவர்களின் ஆர்வம் என்னஎன்பதன் அடிப்படையில் ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். மாணவர்களுக்கு ஆர்வம் மிக்க துறை எது என்பதை அறிந்து அந்த துறையில் பயிற்சி அளித்து அவர்கள் வாழ்வில் உயர தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடம் உள்ள தனித்திறன்களை கண்டறிந்து அத்திறனுக்கு ஏற்ப குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும். மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்க வேண்டும். முதல் மதிப்பெண் பெற இயலவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை எந்த மாணவருக்கும் ஏற்படக் கூடாது.

விழிப்புணர்வு கருத்தரங்கம்

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை சார்பில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி வாழ்வில் உயர முடியும். அரசு, மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா மடிக்கணினியை அறிவுசார்ந்த வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செல்போன்களை தேவையில்லாமல் பயன்படுத்தி மாணவர்கள் தவறான பாதைக்கு சென்று விடக் கூடாது. இதுபோன்ற கருவிகளை அறிவுசார் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் சிறந்த நட்புவட்டாரங்களை உருவாக்கிக் கொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக அமையும். இதன் மூலம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு மலர்விழி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், வேலைவாய்ப்புத்துறை கோவை மண்டல இணை இயக்குநர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்மகேஸ்வரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஐயப்பன், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன், நல்லம்பள்ளி வட்டாட்சியர் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா பானு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x