Published : 18 Feb 2020 08:20 AM
Last Updated : 18 Feb 2020 08:20 AM

டெல்லியில் பிப்.27, 28-ம் தேதிகளில் அரசு பள்ளிகள் செயல்பாடு பற்றிய தேசிய கருத்தரங்கம்: க.பரமத்தி அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தேர்வு

கரூர்

டெல்லியில் பிப்ரவரி 27, 28-ம் தேதிகளில் நடைபெறும் செலிபரேட்டிங் ஸ்கூல் லீடர்ஷிப் என்ற என்ற சிறப்பு கருத்தரங்கத்தில் பங்கேற்கக.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.செல்வகண்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், ஒன்றியத்திலேயே அதிகபட்சமாக 220 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் (55) கடந்த 2016-ல் மாநில நல்லாசிரியர் விருதும், கடந்தாண்டு தேசிய நல்லாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இப்பள்ளி, செயல் வழிக்கற்றல்முறையை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக செயல்வழிக் கற்றல் மாதிரிப் பள்ளி என்ற சிறப்பை பெற்றது. இவரது முயற்சியில், அரசு தொடக்கப் பள்ளிகளில் முதன்முதலாக 2006-ல் கணினி ஆய்வகம் அமைக்கப்பட்டது.

இப்பள்ளியில், ஸ்மார்ட் கிளாஸ், டிஜிட்டல் மல்டி மீடியா வகுப்பறை, அபாகஸ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும், ஸ்போக்கன் இங்கிலீஷ், இந்தி, இசை (கீ போர்டு, வாய்ப்பாட்டு), நடனம் (மேற்கத்திய மற்றும்கிராமியம்), கராத்தே, யோகா, ஓவியம், கேரம், செஸ், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவை கற்றுத்தரப்படுகின்றன.

பள்ளி நிகழ்வுகளை பெற்றோருக்கு உடனுக்குடன் தெரிவிக்க குரல் தகவல் (Voice message) வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பள்ளிக்கு கடந்த 2016-ல் ஐஎஸ்ஓ 9001 சர்வதேசதரச்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் நேஷனல் சென்டர் பாஃர் செலிபரேட்டிங் ஸ்கூல் லீடர்ஷிப் என்ற கருத்தரங்கம் 2-வது ஆண்டாக டெல்லியில் பிப்.27,28-ம் தேதிகளில் நடைபெறுகிறது.

இக்கருத்தரங்கில் பங்கேற்பதற்காக க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன் பள்ளி தொடர்பான தனது செயல்பாடுகளை வீடியோ பதிவு செய்து மத்திய மனித வளமேம்பாட்டு அமைச்சகத்துக்கு விண்ணப்பித்திருந்தார்.

இக்கருத்தரங்கிற்கு இந்திய அளவில் 50அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களும், தமிழகத்தில் இருந்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிபிரிவில் 2 பேரும், தொடக்க, நடுநிலைப் பள்ளி அளவில் 2 பேரும் தேர்வு பெற்றுள்ளனர். இதில் தொடக்கப் பள்ளி பிரிவில் செல்வக்கண்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நடைபெறும்கருத்தரங்கில் செல்வகண்ணன் பங்கேற்று தனது செயல்பாடுகளை விளக்க உள்ளார்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன் கூறும்போது, "அரசு பள்ளிகளை சிறப்பாக செயல்படுத்த வைக்கும் வகையில் இக்கருத்தரங்கம் நடத்தப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x