Published : 18 Feb 2020 08:10 AM
Last Updated : 18 Feb 2020 08:10 AM

மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்க வையுங்கள்: பெற்றோருக்கு இயக்குநர் சேரன் அறிவுரை

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் எஸ்.சுப்பையா தலைமை வகித்தார். விழாவில், திரைப்பட இயக்குநர் சேரன்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசும்போது கூறியதாவது:

மதிப்பெண்ணுக்கும், படிப்புக்கும், வாழ்க்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.அனைத்தும் வெவ்வேறானவை. அனுபவங்கள் தான் ஒருமனிதனை செதுக்குகின்றன.அவமானங்கள் தான் மனிதனை உருவாக்குகின்றன.

சாதனையாளர்கள் அனைவரும் பலவகையான துயரங்களை அனுபவித்தவர்கள் தான்.அவமானம் இல்லாமல் யாரும் சாதித்திருக்க முடியாது.

குடும்ப வறுமை, திரைத்துறையில் கிடைத்த அவமானம், படுதோல்வி என எல்லாவற்றையும் வைத்துதான் ‘ஆட்டோகிராப்’ திரைப்படம் எடுக்கப்பட்டது. வாழ்க்கையில் இருந்துகிடைத்த அனுபவங்களைத்தான் படமாக்கினேன். தீர்வு இல்லாத பிரச்சினைகளே கிடையாது. பிரச்சினைகளை பேசிதீருங்கள்.

மாணவர்கள் விரும்பும் பாடத்தை படிக்கவிடுங்கள். பணத்தைத் தேடி குடும்ப கட்டமைப்பை விட்டுவிட்டு ஊருக்கொருவராக ஓடுவதல்ல வாழ்க்கை. இருப்பதைக் கொண்டு உடனிருந்து மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை. ஆட்சியராக இருந்தால் அந்த மாவட்டத்தைத்தான் மாற்ற முடியும். ஆனால், ஆசிரியரால்தான் தங்கள் மாணவர்கள் மூலம் உலகத்தையே மாற்ற முடியும். இவ்வாறு சேரன் கூறினார்.

சொற்பொழிவாளர் சுமதிஸ்ரீ, பள்ளியின் ஆலோசகர் மு.அஞ்சலிதேவி, நிர்வாக இயக்குநர் நிவேதிதா மூர்த்தி, துணை முதல்வர் குமாரவேல் உள்ளிட்டோர் பேசினர்.பள்ளி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக, பள்ளியின் தாளாளர் தங்கமூர்த்தி வரவேற்றார். நிறைவாக, ஆசிரியர் வெங்கடேஸ்வரன் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x