Published : 17 Feb 2020 07:01 PM
Last Updated : 17 Feb 2020 07:01 PM

குரூப் 2ஏ, குரூப் 4-க்கு இரண்டு தேர்வுகள்: டிஎன்பிஎஸ்சியின் அறிவிப்பு சரியா?

அண்மையில் குரூப்-2ஏ, குரூப்-4 ஆகிய தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி சம்பந்தப்பட்ட 99 பேர் தேர்வெழுத வாழ்நாள் தடை விதித்தது. அதேபோல தேர்வுக்கு ஆதார் கட்டாயம், கைரேகை பதிவு அவசியம் உள்ளிட்ட மாற்றங்களை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து குரூப்-2ஏ, குரூப்-4 ஆகியவற்றுக்கு முதனிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகள் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சிஅறிவித்துள்ளது.

இந்த முறை மாணவர்கள் மத்தியில் சுமையை அதிகரிக்கும் என்று எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து போட்டித் தேர்வுக்குப் பயிற்சி அளிப்பவர்கள், போட்டித் தேர்வுகளை எழுதியவர்கள் என்ன சொல்கின்றனர்?

நாகராஜன், போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊழியர் ஆனவர்:

இரண்டு தேர்வுகள் என்ற அறிவிப்பு நிச்சயம் மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலையே ஏற்படுத்தும். குரூப்-4 என்பது 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கான தேர்வு. குரூப்-2ஏ, குரூப்-2, குரூப்-1 ஆகிய தேர்வுகள் பட்டப்படிப்பை அடிப்படைத் தகுதியாகக் கொண்டவை. இவை அனைத்துக்கும் ஒரே மாதிரியான தேர்வு என்பது சரியாக இருக்காது.

வங்கிப் பணிக்கான தேர்வுகளில் இரண்டு நிலைகள் உண்டு என்றாலும் இரண்டு தேர்வுகளிலுமே அப்ஜெக்டிவ் வகைக் கேள்விகள் மட்டுமே இருக்கும். ஆனால் குரூப்-4 தேர்வுக்கு முதன்மைத் தேர்வில் 3 மதிப்பெண், 5 மதிப்பெண் உள்ளிட்ட வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டிவரும். பாடத்திட்டமும் மாற்றப்பட்டுள்ள சூழலில் இது தேர்வர்களுக்கு பாடச் சுமையை அதிகரிக்கும்; ஆர்வத்தைக் குறைக்கும்.

முறைகேடுகளுக்கு அதிக வாய்ப்பு
பொதுவாகவே தேர்வுகளில் முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்று வரும்போது முறைகேடு நடக்க அதிக வாய்ப்புண்டு. அத்தேர்வுகளில் உரிய மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்படும். எனினும் உயர்நிலைத் தேர்வுகளுக்கு இத்தகைய வடிகட்டல்கள் அவசியத் தேவை. ஆனால் கீழ்நிலைத் தேர்வுகளுக்கு ஏன் இத்தனை வடிகட்டல் என்பதுதான் என்னுடைய கேள்வி.

அதேபோல இந்தத் தேர்வு அறிவிப்புகளால் ஏராளமான பயிற்சி நிறுவனங்கள் முளைக்கும். மாணவர்கள் அதிகம் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். டிஎன்பிஎஸ்சியின் மற்ற அறிவிப்புகளை நான் வரவேற்கிறேன். அதை முறையாகப் பின்பற்றினாலே ஊழல், முறைகேடுகள் தடுக்கப்படும். தரம் மேம்படும்.

பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, போட்டித் தேர்வுப் பயிற்சியாளர்:

டிஎன்பிஎஸ்சியின் நடவடிக்கை சரியான திசையில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. டிஎன்பிஸ்சி போட்டித் தேர்வுகளை எழுதி, தேர்ச்சி பெறுபவர்களில் 90 சதவீதம் பேர் கிராமப்புற மாணவர்களே. மொழிப்புலமை, கணித அறிவு ஆகியவை குறைவாக இருக்கும் நகர்ப்புற மாணவர்களில் பெரும்பாலானோர் விண்ணப்பிப்பது கூட இல்லை. தனியார் வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதால், அவர்களுக்குப் போட்டித் தேர்வில் ஆர்வம் அதிகம் இருப்பதில்லை.

10-ம் வகுப்புக்கான தரத்திலேயே குரூப் 2ஏ, குரூப் 4 என இரு தேர்வுகளும் இருக்கும் என்பதால், தேர்வில் கடினத் தன்மை இருக்காது. அதேபோல குரூப்-1, குரூப்-2 எனஅனைத்துத் தேர்வுகளிலும் இரண்டு நிலைகள் என்பது ஒரே சீராக, ஒழுங்கமைப்புடன் இருக்கும்.

நம்பிக்கை வரும்
பொதுவாகத் தேர்வுகளில் 1:3 என்ற விகிதத்தில் தேர்ந்தெடுப்பு இருக்கும். உதாரணத்துக்கு 30 ஆயிரம் பேர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று, முதன்மைத் தேர்வுக்குச் செல்வார்கள். அதில் தேர்வாகும் 10,000 பேருடன் மீதமுள்ள 20 ஆயிரம் பேருக்கு நம்மாலும் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கை வரும். போட்டித் தேர்வு மீது ஆர்வம், ஈடுபாடு அதிகரிக்கும்.

அதேபோல இரண்டுகட்டத் தேர்வு எழுதிய அனுபவத்துடன் அவர்கள், குரூப்-1, குரூப்-2 போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x