Last Updated : 17 Feb, 2020 03:32 PM

 

Published : 17 Feb 2020 03:32 PM
Last Updated : 17 Feb 2020 03:32 PM

படிப்புக்கு இடையூறாக காதைக் கிழிக்கும் சத்தம்: உ.பி.யில் தொடங்கப்பட்ட ஒலி மாசு ஹெல்ப்லைனில் 36 மணிநேரத்தில் 835 புகார்கள்

பிரதிநிதித்துவப் படம்

லக்னோ

பொதுத்தேர்வுகள் நெருங்குவதை முன்னிட்டு மாணவர்களின் படிப்புக்கு இடையூறு ஏற்படுத்தும் ஒலி மாசு குறித்து புகார் செய்வதற்காக உ.பி. அரசு ஹெல்ப் லைன் 112-ல் பதிவு செய்யுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

உ.பி.யில் பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் அதேவேளை, திருமணங்கள் அதிக அளவில் நடைபெறும் மாதமாகவும் இது அமைந்துள்ளது. இதனால் உ.பி. அரசு மாணவர்களின் படிப்பைக் கவனத்தில் கொண்டு ஒலிப்பெருக்கி ஓசையை கட்டுப்பாட்டில் வைக்க யோகி அரசு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல்துறை கூடுதல் தலைவர் ஆஸிம் அருண் கூறியதாவது:

''இது திருமண சீசன் என்றாலும், அடுத்து வரும் மாதங்களில் தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் முழுமையாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டி உள்ளது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மாணவர்களின் படிப்பை இடையூறு செய்யும்விதமாக சிலர் ஒலி மாசு ஏற்படுத்துவதாகவும் ஒலிப்பெருக்கி ஓசையை கடும் இரைச்சலாக வைப்பதாகப் புகார்கள் வந்தன.

இதனை அடுத்து அரசு, மாணவர்களுக்காக ஹெல்ப்லைன் தொடங்கியது. ஒலி மாசு பற்றிய புகார்களை அவசர ஹெல்ப்லைன் 112 இல் பதிவு செய்யுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டது. ஹெல்ப்லைன் தொடங்கப்பட்ட 36 மணிநேரத்திற்குள், ஒலிப்பெருக்கிகள் மற்றும் உயர் - டெசிபல் டி.ஜே. இசை தொடர்பான 835 புகார்கள் வந்துள்ளன.

106 அழைப்புகளுடன் லக்னோ, அதிகபட்ச புகார்களைக் கொண்ட மாவட்டங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லக்னோ மற்றும் காசியாபாத் போன்ற நகர்ப்புற மாவட்டங்களிலிருந்து ஒலிப்பெருக்கிகள் மற்றும் டி.ஜே.க்களின் அதிகபட்ச சத்தம் குறித்த புகார்கள் வந்தன. லக்னோவிலிருந்து புகார் செய்யப்பட்ட 106 புகார்களில், பெரும்பாலானவை டிரான்ஸ் - கோம்தி பகுதியைச் சேர்ந்தவை. அதைத் தொடர்ந்து 78 அழைப்புகளுடன் காசியாபாத், 54 புகார்களுடன் கான்பூர் நகர், 52 புகார்களுடன் அலகாபாத் மற்றும் ஆக்ராவில் 38 புகார்கள் என அனைத்து அழைப்புகளும் ஒலி மாசுபாடு தொடர்பானது.

மாநிலம் முழுவதிலிருந்து பொதுத்தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவர்கள் இந்த ஒலி மாசு அச்சுறுத்தல் மிகவும் தொந்தரவு செய்ததாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் மூலமாக மாணவர்கள் எங்களுக்குப் புகார் அளித்துள்ளனர்.

சேவையை மேம்படுத்துவதற்காக மாணவர்களின் கருத்துகளின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் புகார் அளிக்கப்பட்ட பிறகு, இதற்காக தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்ட காவல்துறை வாகனங்கள் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் செல்கின்றன. குறிப்பிட்ட இடங்களை வாகனங்கள் அடைய 3-4 நிமிடங்கள் ஆகும். சத்தத்தின் அளவைச் சரிபார்த்து அதற்கான மீட்டரில் பதிவு செய்துகொள்வதோடு, மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் புகார்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன''.

இவ்வாறு காவல்துறை கூடுதல் தலைவர் ஆஸிம் அருண் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x