

காவிரி ஆற்றின் முக்கிய கிளை ஆறுகளில் ஒன்று கபினி (Kabini). இதற்கு இன்னொரு பெயரும் உண்டு கபிலா (Kapila).
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பனமரத்தாறு மற்றும் மனந்தவாடி ஆறு சங்கமித்து வருகிற தண்ணீரால் உருவாகிறது கபினி ஆறு. இது கிழக்கு நோக்கி பயணித்து கர்நாடகாவின் திருமுக்கூடலில் காவிரியில் கலக்கிறது.
விலங்குகளின் வீடு
சர்கூர் நகருக்கு அருகே கபினி நீர்த்தேக்கம் உள்ளது. கபினியின் உப்பங்கழி தண்ணீரை ஒட்டியே வன விலங்குகள் வாழ்கின்றன. குறிப்பாக கோடைகாலத்தில் நீர் வரத்து குறைவாக இருக்கும் போது, வளமான புல்வெளிகள் அமைந்து விலங்குகளுக்குப் புகலிடம் தருகிறது. கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் ஹெக்கடதேவனா கோடே தாலுகா (Heggadadevana kote taluk) சர்கூர் நகரம் அருகில், பிக்கனஹள்ளி (Bichanahalli) மற்றும் பிதரஹள்ளி (Bidarahalli) கிராமங்களுக்கு இடையே, சுமார் 19.5 டி.எம்.சி. தண்ணீர் கொள்ளளவு கொண்ட கபினி அணைக்கட்டு உள்ளது.
கபினி ரிசர்வ் காடு பிரபலமான வனவிலங்குப் பகுதி ஆகும். இது, மைசூரில் இருந்து 80 கி. மீ., தொலைவில் பெங்களூருவில் இருந்து சுமார் 200 கி.மீ., தொலைவில் இருக்கிறது.
இது நாகரஹோல் தேசியப் பூங்காவின் (Nagarahole National Park) ஒரு பகுதி ஆகும். இந்தியாவின் மிகச் சிறந்த விலங்குகள், பறவைகளின் சரணாலயம் இது.தோராயமாக 120 புலிகள், 100 சிறுத்தைகள், யானைகள், கரடிகள், 4 வகை மான்கள் இங்கே இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பக்ரம்தளம் (Pakramthalam) குன்றுகளில், குட்டியாடி (Kuttiady) - மனந்தவாடி (Mananthavady) சாலையில் இந்த நதி உற்பத்தி ஆகிறது. கொரோம் (Korome) அருகே மக்கியாட் (Makkiyad) ஆறு, வலாட் (Valad) அருகே பெரியாறு, பய்யம்பள்ளி (Payyampally) அருகே பனமரத்தாறு, கபினியில் வந்து சேர்கின்றன. பனமரம் ஆற்றின் ஒரு கிளை, பானசுரா சாகர் (Banasura Sagar) நீர்த் தேக்கத்தில் தொடங்குகிறது. மற்றொரு கிளை, லக்கிடி (Lakkidi) குன்றுகளில் பிறக்கிறது.
மேட்டுர் அணைக்கு நீர்
பனமரம் ஆற்று சந்திப்புக்கு அருகே, குருவா தீவு (Kuruva Island) அமைகிறது.
சுமார் 2 கி.மீ. பரப்பளவு கொண்ட இங்கு, பலவகைப்பட்ட தாவரங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. பிரம்மகிரி (Brahmagiri) குன்றுகளில் தோன்றும் கலிந்தி (Kalindi) ஆறு, அதனுடன் திருநெல்லி கோயில் அருகே வந்து சேரும் பாபநாசினி ஆறு ஆகியன, கபினி நீர்த்தேக்கம் குருவா தீவு இடையே, வந்து இணைகின்றன. இத்துடன், தராக்கா, நூகு ஆகிய சிற்றாறுகளும் கபினியில்தான் கலக்கின்றன.
மைசூர் மாவட்டம், ஹெக்கட தேவனா கோடே (Heggadadevanakote) தாலுகா, பீச்சன ஹள்ளி (Beechanahally) அருகே உள்ளது, 1974-ல் கட்டப்பட்டது கபினி அணைக்கட்டு.
பெங்களூரூ மாநகருக்குக் குடிநீர் வழங்குவது இந்த அணைதான். மேட்டூர் அணைக்கும் இங்கிருந்துதான் தண்ணீர் வருகிறது. தென் இந்தியாவின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் கபினி எனப்படும் கபிலா நதி, சுற்றுலாவுக்கும் மிகச் சிறந்த இடம்.
கோடையில் கபினி செல்லுங்கள். கால் நனையுங்கள். களிப்படையுங்கள்.
(தொடர்வோம்)
கட்டுரையாளர், ‘நாட்டுக்கொரு பாட்டு’, ‘பொருள்தனை போற்று’ உள்ளிட்ட புத்தகங்களை எழுதியவர்.