Published : 17 Feb 2020 08:17 AM
Last Updated : 17 Feb 2020 08:17 AM

3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி: நியூஸி. லெவன் அணியுடன் இந்தியா டிரா

ஹாமில்டன்

இந்தியா - நியூஸிலாந்து லெவன் அணிகளுக்கு இடையிலான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்குஇடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. அதற்கு முன்னதாக நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டியில் இந்தியா ஆடியது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த இன்னிங்ஸில் இந்திய வீரர் ஹனுமா விஹாரி 101 ரன்களைக் குவித்தார். அவருக்கு துணையாக புஜாரா 93 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதைத்தொடர்ந்து ஆடிய நியூஸிலந்து லெவன் அணி, தங்கள் முதல் இன்னிங்ஸில் 235 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.

நியூஸிலாந்து லெவன் அணியை விடமுதல் இன்னிங்ஸில் 28 ரன்களை அதிகமாக எடுத்திருந்த இந்திய அணி இதைத்தொடர்ந்து ஆடவந்தது. முதல் இன்னிங்ஸில் மிகச் சொற்ப ரன்களில் அவுட் ஆன தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷாவும், மயங்க் அகர்வாலும் இந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 59 ரன்களை எடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்று காலையில் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை இந்திய அணி தொடர்ந்து ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான பிருத்வி ஷா, 39 ரன்களில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஷுப்மான்கில் 8 ரன்களில் ஆட்டம் இழக்க, மயங்க்அகர்வாலுடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி, நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நொறுக்கியது. நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிய தொடக்க ஆட்டக்காரரான மயங்க் அகர்வால், 99 பந்துகளில் 81 ரன்கள் எட்டினார். இந்த ஜோடி, 100 ரன்களை எட்டிய நிலையில் மயங்க் அகர்வால் ரிடயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து ரிஷப் பந்த் 65 பந்துகளில் 75 ரன்களைவிளாசினார். இந்நிலையில் மிட்செலின் பந்துவீச்சில் பந்த் அவுட் ஆக, சாஹாவும்அஸ்வினும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் இருவரும் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். சாஹா 30, அஸ்வின்16 ரன்களில் ஆடிக்கொண்டு இருந்தபோது, ஆட்டத்தை டிராவில் முடிக்க இரு அணிகளின் கேப்டன்களும் ஒப்புக்கொண்டனர். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்களாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x