Published : 17 Feb 2020 08:14 AM
Last Updated : 17 Feb 2020 08:14 AM

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாகிறது: அமெரிக்க ஆய்வில் புதிய தகவல்

வாஷிங்டன்

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஆண்டின் சில நாட்கள் மட்டும் உப்பு நீர் உருவாக வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கிரக அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றம் குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.

இந்த ஆய்வின் முடிவுகள் வானியற்பியல் இதழில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் உருவாவது மிகவும் கடினம். குளிர் காலத்தில் கிரகத்தின் மேற்பரப்பில் உருவாகும் பனி வெப்பசூழ்நிலைக்கு வந்து திரவமாவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பாக வளிமண்டலத்தில் விரைவாகக் கரைந்துவிடும் என்பதே இதற்கு காரணமாகும். செவ்வாய் கிரகத்தின் வளிமண்டல அழுத்தம் நீர் மூலக்கூறுகளின் (எச்2ஒ) அழுத்தத்தை ஒத்துள்ளது. இது நிலப்பரப்பில் திரவ நீர் இருக்க தேவையான அளவை விட குறைந்த அழுத்தமாகும். கிரகத்தில் ஏராளமான குளிர் பனி நிறைந்த பகுதிகள் மற்றும் ஏராளமான சூடான பனி பகுதிகள் உள்ளன.

வெப்பநிலை காரணமாக பனிக்கட்டிஉருகும் இடத்திற்கு மேலே இருக்கும் பகுதிகள் இனிமையான (மிதமான வெப்பநிலை) இடமாகும். ஆனால், அதன் இருப்பை துல்லியமாக கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த இடத்தில்தான் திரவ நீர் உருவாகிறது.

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நடு அட்ச ரேகைகளில் அமர்ந்திருக்கும் ஒரு பாறை குளிர்காலத்தில் ஒரு நிழலை கொண்டுள்ளது. குளிர்காலத்தில் அந்த கற்பாறைக்கு பின்னால் விழும் நிழல் பகுதியில் நீர் பனி குவிந்து கிடக்கிறது. அதில் சூரிய வெளிச்சம் படும்போது ​​பனி திடீரென்று வெப்பமடைகிறது.

அதன் விரிவான மாதிரி கணக்கீடுகளில், கிரகத்தில் காலையில் மைனஸ்128 டிகிரி செல்சியஸ் இருந்த வெப்பநிலை மதியத்துக்குள் மைனஸ் 10 டிகிரி செல்சியஸாக உயர்கிறது. இது ஒரு நாளில் கால் பகுதி நேரத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றமாகும்.

ஆனால், குறுகிய காலத்தில், உறைபனி அனைத்தும் கரைந்து வளிமண்டலத்திற்கு செல்லவில்லை. இதனால், அப்பகுதியில் இருக்கும் நீரானது உப்பு கரைசலாக இருக்கலாம். ஏனென்றால் உப்பு நிறைந்த தரையில், நீர் பனி மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் உருகிவிடும்.பனி அனைத்தும் திரவமாக அல்லது நீராவியாக மாறும் வரை உப்புநீர் இருக்கிறது. இந்த நிகழ்வு நடந்து முடிந்து, அடுத்த செவ்வாய் ஆண்டில் (687 நாட்கள்), இதே செயல்முறை மீண்டும் நிகழ்கிறது.

கற்பாறைகளுக்குப் பின்னால் இருக்கும் நிழல் பகுதிகள் குளிர்காலத்தில் மிகவும் குளிராக இருப்பதால், அங்கு நீர் உறைபனி மற்றும் கார்பன் டைஆக்சைடு நிறைந்த பனியும் உருவாகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x