Published : 17 Feb 2020 08:12 AM
Last Updated : 17 Feb 2020 08:12 AM

பிஹார் பெண் கூலித் தொழிலாளி மலையாள மொழித் தேர்வில் நூற்றுக்கு நூறு: கல்விக்கு மொழி தடையில்லை என நிரூபணம்

கல்விக்கு மொழி தடையில்லை என்பதற்கு சான்றாக பிஹாரைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் மலையாள தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து முதல் இடம் பிடித்துள்ளார்.

கேரள அரசு சார்பாக மாநில எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின் கீழ், கல்வி கற்க வாய்ப்பிழந்தோர், அந்தந்த வகுப்புகளுக்கு இணையான படிப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறும்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.அதன்படி, இளமையில் பள்ளிப்படிப்பை தொடர முடியாமல் போன, பல முதியவர்கள் தற்போது அதற்கு இணையான வகுப்பில் படித்து வருகின்றனர். சமீபத்தில் 105 வயதான பாகீரதி அம்மா என்பவர் 4-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருந்தார்.

மாநில எழுத்தறிவு திட்டத்தின் ஒரு பகுதியாக சங்கதி (நண்பன்)என்ற திட்டத்தின்கீழ் புலம்பெயர்ந்தோருக்காக 4 மாதங்களில் மலையாளம் கற்று கொடுக்கும் திட்டம்கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 3,700 க்கும் மேற்பட்டபுலம்பெயர்ந்தோர் இத்திட்டத்தின் கீழ்படித்து வருகின்றனர். இதில் பிஹாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர் நூற்றுக்கு நூறு எடுத்து தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

கூலித் தொழிலாளி

பிஹாரைச் சேர்ந்தவர் ரோமியா கதூர் (26). இவர் தனது கணவர் சைபுல்லாவுடன் வேலை தேடி கொல்லம் மாவட்டம் உமாயநல்லூருக்கு கடந்த 2014-ம் ஆண்டு வந்தார். இவருக்கு தற்போது 3 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், கேரள மாநில எழுத்தறிவு திட்டத்தை அறிந்த அவரும்அதில் இணைந்தார்.

அதன்படி, 4 மாதங்களாக மலையாள மொழி பயிற்சி வகுப்புக்கு தனது கைக்குழந்தை தமன்னாவுடன் சென்றார். இதனைத் தொடர்ந்து ஜனவரி19-ம் தேதி நடந்த மலையாள மொழித்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து ரோமியா முதலிடம் பிடித்துள்ளார். இதனையறிந்த சங்கதிதிட்ட இயக்குநர் பி.எஸ். கலா ரோமியா வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்தார்.

இதுகுறித்து ரோமியா கூறுகையில், “மொழித் தெரியாத மாநிலத்துக்குவந்த நான் தற்போது மலையாள மொழித்தேர்வில் நூறு மதிப்பெண் எடுத்துள்ளேன். எனது குழந்தைகளுக்கு நானே மலையாளம் கற்றுக் கொடுத்து வருகிறேன்” என்றார்.

புலம்பெயர்ந்தவர்கள் மலையாள மொழியை கற்றுக் கொண்டுத் தேர்வு எழுத வசதியாக அரசு சார்பாக ஹமாரி மலையாளம் என்ற கையேடு வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவரவர் தாய்மொழியில் இருந்து மலையாளத்தை கற்றுக் கொள்ள முடியும்.

படிப்பை தொடர உதவி

தற்போது மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்ற புலம்பெயர்ந்தவர்களுக்கு 2-ம் கட்டமாக பள்ளி படிப்பை தொடரவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தங்கள் மாநிலத்தில் பள்ளி படிப்பை பாதியில் விட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் கேரள பள்ளிகளுக்கு இணையான வகுப்பில் படித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x