Published : 17 Feb 2020 07:59 AM
Last Updated : 17 Feb 2020 07:59 AM

மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு ஏற்படுவது ஏன்? - மேலாண்மை முறை குறித்து ஆசிரியர்களுக்கு விளக்கம்

கோவை

மாணவர்களுக்கு கற்றல் குறைபாடுகள் ஏற்படுவது ஏன்? என்றும், இதற்கான மேலாண்மை முறைகள் குறித்தும் ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோவை மாவட்ட உதவி திட்ட அலுவலர் கண்ணன் விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில், கற்றல் குறைபாடு உடையவர்களைக் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் வகையில், அவர்களைக் கையாளும் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறையால் பல கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு ஏற்படும் கற்றல்குறைபாடுகள், அவற்றை களைவதற்கான தீர்வுகள் குறித்து விளக்கிறார், கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் கே.கண்ணன்.

“வழிமுறைகளை பின்தொடர சிரமப்படுதல், கதை சொல்வது, வார்த்தைகளைக் கண்டுபிடித்தல் அல்லது புரிந்து கொள்வதில் சிரமப்படுதல், எண், எழுத்து, வாரம், மாதம் போன்றவற்றை வரிசைப்படுத்துவதில் சிரமப்படுதல் போன்றவை கற்றல் குறைபாட்டின் பொதுவான அறிகுறிகள் ஆகும்.படிக்க இயலாமை, வாசிக்கும் திறனைஇழத்தல் போன்ற குறைபாடு உடையவர்கள் மெதுவாக அல்லது தயக்கத்துடன் படிப்பார்கள். படிக்க மற்றவர்களுக்கு இடம் கொடுப்பார்கள். தழைகீழ் வாசிப்பு, சொல் இட மாற்றம், வார்த்தைகள் அல்லது எழுத்துக்களை சொற்களில் புகுத்துதல், சிறிய வார்த்தைகளில் குழப்பம், படிக்கும் போதுவரிகளை விட்டுவிடுதல், யோசித்து படித்தல் போன்றவற்றையும் பொதுவான அறிகுறிகளாகக் கருதலாம்.

முடிக்கப்படாத பாடக்குறிப்புகள், ஒன்று போல் ஒலிக்கும் வார்த்தைகளில் குழப்பம், தாமதாக எழுதுதல், தவறாக பென்சில் பிடித்தல், தெளிவற்ற கையெழுத்து போன்ற எழுத்து குறைபாடுகளும் கற்றல் குறைபாட்டின் ஒரு பகுதியாகும்.

கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல், பகுத்தறிதல், கணக்கிடல் போன்றவற்றில் கணிசமாக ஏற்படும்கோளாறுகளை கற்றல் குறைபாடுகளின் வரையறையாகக் கருதப்படுகிறது. மாணவர்களின் திறன் மற்றும்செயல்திறன் ஆகியவற்றுக்கு இடையேஉள்ள வேறுபாடு நிரந்தரமானது. முற்றிலும் தடுக்க முடியாது. இது ஒரு நோய் அல்ல. இதன் வரம்பு சாதாரண நிலையில் இருந்து கடுமையான நிலைக்கு மாறுகிறது.

குறைந்தபட்ச மூளை செயலிழப்பு,மூளை ரத்தக்கசிவு, சாதகமில்லாத உள் கருப்பை சூழல், பெருமூளை நோய்கள், மரபணு சார்ந்த பிரச்சினைகள், பிறழ்ச்சி காரணமாக குழந்தை பிரசவத்துக்கும் முன்பும்,பிறப்புக்கு பின்பும் உள்ள பிரச்சினைகள் இதற்கு முக்கிய காரணங்களாகும்.

குறைவான தொடு உணர்ச்சி, மோசமான காட்சி, குறைந்த காட்சிகளின் நினைவகம், புரிந்து கொள்ளுதல், தவறான பழக்கம், சமூக செயல்பாட்டு நடைமுறை சிக்கல், இடைவெளி நோக்கு நிலை, தற்காலிக கருத்து மற்றும் மொழிச் சிக்கல்கள் போன்றவை புலனுணர்வு குறைபாடுகளாகும்.

பேசப்படும் வார்த்தை மற்றும் பேசுவதை புரிந்துக் கொள்ள இயலாமை, பேச்சு, எழுத்து அல்லது சைகைகளில் வார்த்தைகளைக் கையாளவும், வெளிப்படுத்தவும் இயலாமை போன்ற வாய்மொழி குறைபாடுகளும் காரணமாகின்றன.

எண்களில் குழப்பம், எண்ணிக்கையில் முரண்பாடுகள், எழுத்தில் பிரதிபலிப்பு, அறிகுறிகளில் குழப்பம், நெடுவரிசையின் பதில்களை மாற்றும் போதுபிழை ஏற்படுதல், பொருத்தமான வழிமுறையைப் புரிந்து கொள்வதில் சிரமம், கருத்தாங்களைக் புரிந்து கொள்வதில் சிரமப்படுதல் போன்ற எண் கணித குறைபாடுகள் இப்பாதிப்பின் அறிகுறிகளாகும். இத்தகைய குறைபாடுகள் உள்ள மாணவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். கல்வித்திறனை மதிப்பிடுதல், இணை நோய்த் தடுப்புத்திறன் மதிப்பீடு ஆகியவற்றைச் செய்ய வேண்டும்.

அதிகப்படியான செயல்திறனைக் குறைக்கும் மருந்து, மெகா வைட்டமின் சிகிச்சை, உணவு மேலாண்மை ஆகியமருத்துவ மேலாண்மை முறைகளையும், குழந்தைகளுக்கு பொருத்தமான இடமளித்தல் போன்ற கல்வி மேலாண்மை முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

சுயகண்காணிப்பு, வழிகாட்டுதல் குறிப்புகள், நினைவூட்டுச் சாதனங்கள், கூட்டாகக் கற்றல், இணை நிலையினர் பயிற்சி, பல்நோக்கு அணுகுமுறை போன்ற பரிணாம முறையில் கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரத்தை நிர்வகிக்க வேண்டும். மாணவர்களை வீட்டு வேலைகளை செய்ய வைத்தல், பள்ளிக்கு சரியானபுத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை எடுத்துச் செல்லுதல், நிலையான நேர்மறை உள்ளீடுகளை ஏற்படுத்துதல், தெளிவான அறிவுரை போன்றவற்றை வழங்க வேண்டும்.

ஆசிரியர்கள் குறைந்த அளவில் வீட்டுப் பாடம் எழுத கொடுக்க வேண்டும். இலக்கணப் பிழைகள் இல்லாமல் உள்ளடக்கத்திற்காக மதிப்பீடு கொடுத்தல், புத்தகத்தில் சிவப்பு கோடுகளை குறைவாகக் கொடுத்தல், தேர்வெழுதிமுடிக்க கூடுதல் நேரம் கொடுத்தல், வகுப்பில் மாணவர்களை தொடர்ந்து கண்காணித்தல் போன்றவற்றைப் பின்பற்ற வேண்டும். சில குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு உளவியல் செயல்பாடுகளில் பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் கற்றல் குறைபாடுகள் கொண்ட குழந்தைகளின் கற்றல் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. சிறப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளால் சமாளிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். த.சத்தியசீலன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x