Last Updated : 17 Feb, 2020 07:52 AM

 

Published : 17 Feb 2020 07:52 AM
Last Updated : 17 Feb 2020 07:52 AM

பிளஸ் 1, பிளஸ் 2 சத்துணவியல் செய்முறைத் தேர்வில் ஊட்டச்சத்து உணவு தயாரித்த மாணவிகள்

பிளஸ் 2 அறிவியல் செய்முறைத் தேர்வில் ஊட்டச்சத்து உணவு தயாரித்த மாணவிகள். படம்: ஜெ.மனோகரன்.

கோவை

பிளஸ் 1, பிளஸ் 2 சத்துணவியல் செய்முறைத் தேர்வில், ஊட்டச்சத்து மற்றும் நோயாளிகள் உட்கொள்ளும் உணவுகளை தயாரித்து கோவை அரசு பள்ளி மாணவிகள் அசத்தினர்.

விதவிதமான உணவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில்பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 2-ம் தேதிதொடங்கி, 24-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, 26-ம்தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் செய்முறைத் தேர்வு பள்ளிகளில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள 210அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் கடந்த 5-ம் தேதி தொடங்கி 13-ம்தேதி நிறைவடைந்தன. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ராஜவீதி துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் சத்துணவியல் பாடம் இடம் பெற்றுள்ளது. இப்படிப்புக்கான செய்முறைத் தேர்வில் பங்கேற்றுள்ள மாணவிகள் ஊட்டச்சத்து மற்றும் நோயாளிகள் உட்கொள்வதற்கேற்ற உணவுகளை தயாரித்து அசத்தினர்.

துணிவணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் விதவிதமான உணவு வகைகளை அவர்களுக்கு அளிக்கப்பட்ட செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தயாரித்தனர். இது குறித்து அப்பள்ளியின் முதுகலை சத்துணவியல் ஆசிரியை கே.ரஹீமா கூறியதாவது:

அனைத்து வயதுக்கும்...

சத்துணவியல் அறிவியல் செய்முறைத் தேர்வு, அறிவியல் பாடப்பிரிவு மாணவிகளுக்கு நடத்தப்படும் பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வின் ஒரு பகுதியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 15 மாணவிகளும், பிளஸ் 2 படிக்கும் 21 மாணவிகளும் சத்துணவியல் செய்முறைத் தேர்வில் ஈடுபட்டனர். முன்பள்ளி பருவம், பள்ளி பருவம், வளரிளம் பருவம், முதிர் பருவம், முதுமைப் பருவங்களில் உட்கொள்ள ஊட்டச்சத்து உணவு வகைகள் குறித்தும், சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள் உள்ளிட்ட நோயாளிகள் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்தும் மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு, அவற்றைத் தயாரிப்பது எப்படி? என்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.

செய்முறைக்கு மதிப்பெண்

அதன் தொடர்ச்சியாக சத்துணவியல் செய்முறைத் தேர்வில் மாணவிகளுக்கு கொடுக்கப்பட்ட தலைப்புகளின் கீழ், அவர்கள் ஊட்டச்சத்து உணவுகளைத் தயாரித்தனர். இதுபொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்ணில் ஒரு பகுதியாக நடத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x