Published : 17 Feb 2020 07:46 AM
Last Updated : 17 Feb 2020 07:46 AM

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ்’ அகாடமி இணைந்து நடத்திய வழிகாட்டு நிகழ்ச்சி; ஐஏஎஸ் தேர்வில் வெற்றிபெற வறுமை தடையில்லை: நெல்லை உதவி ஆட்சியர் நம்பிக்கை

‘இந்து தமிழ்’ நாளிதழ் மற்றும் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் நேற்று நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ நிகழ்ச்சியில் திருநெல்வேலி உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் பேசினார். அருகில், கல்லூரி முதல்வர் ஜே.ஆர்.வி.எட்வர்ட், சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர். தீனதயாளன், ‘இந்து தமிழ்’ நாளிதழ் நடுப்பக்க ஆசிரியர் சமஸ், தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா.

நாகர்கோவில்

வறுமையான சூழலையும் எதிர்கொண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற முடியும் என்று, திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார்.

‘இந்து தமிழ்’ நாளிதழ் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் சிவில் சர்வீஸஸ் மற்றும் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான வழிகாட்டு நிகழ்ச்சி யை கடந்த ஆண்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

2-வது ஆண்டாக இந்நிகழ்ச்சி நாகர்கோவில், மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், சென்னை, திருச்சி, திருநெல்வேலி உட்பட 13 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டு, அதில் முதல் நிகழ்ச்சி நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

பகுதி நேர வேலை

ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ். பேசியதாவது: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தேன். அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். சிறந்த பொறியாளராக வேண்டும் என்ற இலக்குடன் படித்தேன்.

பள்ளியில் முதல் மாணவனாகவும் வந்தேன். வீட்டில் வைத்திருந்த விதை நெல்லை விற்று கல்லூரியில் சேர்வதற்கான பணத்தை திரட்டினேன். அரசு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. அதேநேரம் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்தது. இது எனக்கு கவலை அளித்தது. பொறியாளராக இல்லையென்றால் ஆட்சியராகி விடலாம் என்று தோன்றியது. அது எளிதா? என்ற அச்சமும் எனக்குள் இருந்தது. வீட்டு வறுமை சூழலை பொருட்படுத்தாமல் இரவு, பகலாக படித்தேன். தமிழ் மொழியில் படித்ததால், ஆங்கில மொழியில் திறமையை வளர்க்க பெரும் சிரமப்பட்டேன். படிப்பு செலவுக்காக மொபைல் ரீசார்ஜ் கடையில் பகுதி நேரமாக வேலை பார்த்தேன். அதில் கிடைத்த 300 ரூபாய் பேருதவியாக இருந்தது.

வறுமையான சூழலையும் எதிர்கொண்டு நம்மால் படிக்க முடியும். விடா முயற்சியும், இலக்கு நோக்கிய பயணத்திலிருந்தும் தடம் மாறிவிடக் கூடாது என்றார் அவர்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் நிர்வாக இயக்குநர் எஸ்.ஆர். தீனதயாளன் வாழ்த்துரை வழங் கினார். ‘இந்து தமிழ்’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் அனை வருக்கும், அனைத்து தேர்வு மாதிரி வினாத்தாள், பாடத்திட்ட கையேடு இலவசமாக வழங்கப் பட்டது. இந்நிகழ்வை SAR டிவி மற்றும் ஸ்ரீ டிவி ஆகியவை இணைந்து வழங்கின.

பிப்ரவரி 23-ல் மதுரையில் அடுத்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கனவு நிறைவேற வேண்டும்

தியாகி கொடிக்கால் ஷேக் அப்துல்லா பேசும்போது, “இளைஞர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாக வரவேண்டும். சோதனைகள் நிறைந்துள்ள இந்த காலத்தில், இளைஞர்களின் மகத்தான சேவையை நாடு எதிர்பார்க்கிறது. இந்த தேசத்துக்காக பலரும் தியாகங்களை செய்துள்ளனர். அவர்களது கனவு மாணவ, மாணவிகள் மூலம் நிறைவேற வேண்டும். இந்த மண்ணும், மக்களும் மேன்மையுற இளைஞர்களை அன்போடு அழைக்கிறேன்” என்றார்.

பிப்ரவரியில் தேர்வு அறிவிப்பு

சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் முதன்மை பயிற்றுநர் எஸ்.சந்துரு பேசும்போது, “ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் சிவில் சர்வீஸஸ் தேர்வு அறிவிப்பு வெளியாகிறது. சுமார் 11 லட்சம் பேர் இத் தேர்வுக்கு விண்ணப்பிக்கின்றனர். அதில் 4.5 லட்சம் பேர் மட்டுமே முதல்நிலை தேர்வை எழுதுகின்றனர். அவர்களில் 12 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வாகிறார்கள். இதில் 2,500 பேர் பிரதான தேர்வில் வெற்றி பெறுகின்றனர். நேர்முகத் தேர்வு டெல்லியில் நடத்தப்படுகிறது. இத் தேர்வுக்குப்பின் ஆயிரம் பேருக்கு, அவர்கள் பெறும் மதிப்பெண் பட்டியலின் அடிப்படையில் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன” என்றார்.

வார்த்தைகள் வழியேதான் விரிகிறது வாழ்க்கை!

‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசியது: “சில பெரியவர்கள் தங்கள் கல்வித் தகுதியைப் பேசுகையில், ‘நானெல்லாம் அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சி' என்று சொல்வதைக் கேட்கலாம். நாம் சாதாரணமாகக் கடந்துவிடக்கூடிய இந்தச் சொல்லாடலுக்குப் பின் ஒரு செய்தி இருக்கிறது. ‘இந்தக் காலத்துப் பத்தாம் வகுப்பு ஆட்கள் அறிவோடு என் அறிவை ஒப்பிடக் கூடாது’ என்கிற செய்தியே அது. அதாவது, இன்று பத்தாம் வகுப்பு முடித்திருக்கும் பெரும்பாலானோர் பெயரளவில் ஒரு சான்றிதழைப் பெற்றுவிடுகிறார்கள்; ஆனால், அதற்குரிய முழுத் தகுதியை அவர்கள் பெற்றிருக்கவில்லை என்கிற விமர்சனம் இதன் பின்னணியில் இருக்கிறது. உண்மையில் இன்று வளரும் நாடுகளில் கல்வித் துறை எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று இது. அதாவது, ஒரு படிப்பை முடிப்பவர்கள் அதற்குரிய திறன்களைப் பெற்றிடாமல் இருப்பது. ஒரு ஐந்தாம் வகுப்புக் குழந்தைக்கு ஐந்நூறு சொற்கள்கூடத் தெரியவில்லை என்பது வெளிப்படுத்துவது இந்தத் திறன் பற்றாக்குறையைத்தான். இப்படியே பட்டப் படிப்பு வரைகூட முடித்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால், ஒரு பட்டத்தைப் பெற்றுவிடுவதாலேயே நமக்கு எல்லாமும் தெரியும் என்றும் அவர்கள் நினைத்துவிடுகிறார்கள். இனி நாம் படிக்க, வாசிக்க ஏதும் இல்லை என்றும் முடிவெடுத்துவிடுகிறார்கள். இத்தகு பண்பு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் ஒரு சமூகத்தின் எதிர்காலம் என்னவாகும்?” என்றார் சமஸ்.

மாணவ, மாணவிகள் உற்சாகம்

அனுஷியா, நாகர்கோவில்: நான் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதியுள்ளேன். தேர்வில் வெற்றி பெறுவதை இலக்காக வைத்துள்ளேன். இந்த வழிகாட்டு நிகழ்வு எனக்கு பயனுள்ளதாக அமைந்தது. மற்றவர்களு க்கும் பயனுள்ளதாக இருந்தது. நல்ல ஆலோ சனைகளை பெற முடிந்தது.

கவின், அகஸ்தீஸ்வரம்: அடுத்து என்ன படிக்கலாம்? என்ற குழப்பத்தில் இருந்தேன். அதற்கு ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சி தீர்வாக அமைந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதி அரசு பணியில் சேர்வதற்கான வழியைக் காட்டியுள்ளனர்.

தஸ்லிமா, களியக்காவிளை: கல்லூரியில் தமிழ் வழியில் கல்வி பயின்று வருகிறேன். குரூப் 4, குரூப் 1 தேர்வுகளை எழுதியுள்ளேன். நான் எதிர்பார்த்ததை விட சிறப்பான ஆலோசனைகளை பெற்றேன். இதுவரை அறிந்திடாத தேர்வு நுணுக்கங்களை எளிதாக விளக்கினர்.

மாரிராஜம், தூத்துக்குடி: ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்தது. 10ம் வகுப்பு முதலே சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். இனி வரும் தேர்வுக்கு தயாராக உந்துதலாக இருந்தது. நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு நன்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x