Published : 17 Feb 2020 07:37 AM
Last Updated : 17 Feb 2020 07:37 AM

வசதி அதிகரித்தால் இரண்டு மடங்கு கூடுதலாக உணவு வீண் விரயம்

லண்டன்

ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2005-ம்ஆண்டில் முதன்முதலில் உணவுவீணாதல் குறித்து ஆய்வு நடத்தியது. அதன் கணக்கெடுப்பின்படி உணவில் மூன்றில் ஒரு பங்கைச்சராசரியாக மனிதர்கள் வீணடிக்கிறார்கள் என்று கணக்கிடப்பட்டது. நெதர்லாந்து நாட்டில் உள்ள வகினென்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆராய்ச்சியில் அப்போது ஈடுபட்டனர்.

அதன் பிறகு தற்போது உணவு வீண் விரயம் செய்யப்படுவது தொடர்பாக புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே கணக்கிடப்பட்டதை விடவும் இரண்டுமடங்கு கூடுதலாக உணவு பண்டம் வீணடிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் பணம்படைத்தவர்களாக இருப்பவர்களே உணவை வீணடிக்கிறார்கள். ஆகவேநுகர்வோரின் செல்வச்செழிப்புக்கும் உணவு வீணடித்தலுக்கும் இடையிலான தொடர்பு இந்த ஆய்வில் முக்கிய இடம் பிடித்துள்ளது. எதிர்காலத்தில் இது மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக வங்கி,உலக சுகாதார அமைப்பு ஆகியவைவழங்கிய தகவல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் உணவு வீணடிக்கப்படுவதற்கும் செல்வம் கொழிப்பவர்களின் உணவுப்பழக்கத்துக்கும் இடையிலான தொடர்பு அலசி ஆராயப்பட்டது.

இதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் நாடு வாரியாக உணவுவீணாக்கப்படுவது குறித்து பட்டியலிடப்பட்டது. அதன்படி ஒரு தனிமனிதன் நாளொன்றுக்கு ரூ.480-க்கு (6.70 அமெரிக்க டாலர்கள்) மேல் செலவழிக்கக் கூடிய அளவுக்கு வசதி படைத்தவராக மாறும் போது அவர் உணவை வீணாக்கும் போக்கின் அளவும் கூடத் தொடங்கிவிடுகிறது.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இந்த ஆய்வை ஐநா சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மேற்கொண்டு வருகிறது. ஆனால், அது முன்னிறுத்தும் தகவல்கள் தோராயமானதே. ஐநாசபையின் உணவு மற்றும் வேளாண்மைஅமைப்பின் மதிப்பீட்டின்படி 2015-ல்தனிநபர் ஒருவர் நாளொன்றுக்கு 214 கிலோ கலோரி உணவை வீணடிக்கிறார். ஆனால், தற்போது நடத்தப்பட்டு இருக்கும் புதிய ஆராய்ச்சியில் 2015-ம் ஆண்டில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு நபர் வீதம் 527 கிலோ கலோரி உணவு வீணடிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.-பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x