Published : 16 Feb 2020 08:35 AM
Last Updated : 16 Feb 2020 08:35 AM

6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்: தஞ்சை தமிழ் பல்கலை.க்கு தகவல் ஆணையர் உத்தரவு

சென்னை

தமிழில் போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு வசதி யாக, 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்சிஇஆர்டி பாடத்திட்ட புத்தகங்களை தமிழில் உடனடியாக மொழிபெயர்த்து வழங்குமாறு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆவடியை சேர்ந்த ஆர்.சந்தர் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய மனுவில் கூறியிருந்ததாவது:

நீட், ஜேஇஇ, ரயில்வே, தபால், வங்கி மற்றும் மத்திய அரசு பணிகளுக்கான அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான என்சிஇஆர்டி (தேசிய கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில்) பாடத்திட்ட புத்தகங்களில் இருந்தே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அந்த புத்தகங்கள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருப்பதால், தமிழ்வழி மாணவர்களால் படித்து புரிந்துகொள்ள முடியவில்லை.

மொழிபெயர்ப்பில் தவறு

தவிர, மத்திய அரசின் தேர்வுகளில் தமிழில் மொழிபெயர்த்து கேட்கப்படும் கேள்விகளில் தவறு ஏற்படுவதால், மாணவர்கள் அதை சரியாக புரிந்து கொண்டு தேர்வு எழுத முடியவில்லை. இதனால், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியாத நிலை ஏற்படுகிறது.

இதை கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள பாடப் புத்தகங்களை தமிழ்வழி மாணவர்களும் படிக்கும்வகையில், தமிழில் மொழிபெயர்த்து வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

இவ்வாறு அந்த மனுவில் கேட்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திடம் இருந்து முறையான பதில் வராததால், மாநில தகவல் ஆணையத்தில் மனுதாரர் சந்தர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்து, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழ் இலக்கியங்களை மற்ற மொழிகளிலும், மற்ற மொழி இலக்கியங்களை தமிழிலும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் மொழிபெயர்த்து வருகிறது.

தமிழில் எழுத ஆர்வம்

தமிழ்வழியில் பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் குடிமைப்பணி உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளை தமிழிலேயே எழுத ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், என்சிஇஆர்டி பாடத்திட்ட புத்தகங்கள் தமிழில் இல்லை. எனவே, 6 முதல் 12-ம்வகுப்பு வரை ஆங்கிலம், இந்தி மொழிகளில் என்சிஇஆர்டி வெளியிட்டுள்ள இயற்பியல், வேதியியல், வரலாறு, புவியியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய பாடப் புத்தகங்களை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உடனடியாக தமிழில் மொழிபெயர்த்து வழங்க வேண்டும். இந்த தமிழ் மொழிபெயர்ப்பை பல்கலைக்கழக இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து மாநில தகவல் ஆணையம் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக்கல்வித் துறை செயலாளர்களுக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x