Published : 15 Feb 2020 05:13 PM
Last Updated : 15 Feb 2020 05:13 PM

ஏழை மாணவர்களுக்குக் காலை உணவு: பூமி பூஜை விழாவில் ஆளுநர், முதல்வர் பங்கேற்பு

மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்துக்கான பூமி பூஜை விழாவில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் பங்கேற்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை மூலம் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் 5,000 மாணவர்களுக்குக் காலை உணவு அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் வெற்றிகரமான பயணத்தை அடுத்து, க்ரீம்ஸ் சாலையில் 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை மாபெரும் சமையலறை ஒன்றைக் கட்டுகிறது. இதற்கான பூமி பூஜை விழாவில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதற்கான உத்தேசச் செலவு ரூ.5 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இதைக் கட்டி முடிப்பதன் மூலம் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மாநகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு காலை உணவை அளிக்க 'அட்சய பாத்திரம்' அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது.

இந்தச் சமையல் அறையானது அடுத்த 6 மாதங்களில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ரூ.5 கோடியை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். அண்மையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது விருப்ப நிதியில் இருந்து ரூ.2 கோடியை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, அட்சய பாத்திரம் அறக்கட்டளை நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x