Last Updated : 14 Feb, 2020 02:48 PM

 

Published : 14 Feb 2020 02:48 PM
Last Updated : 14 Feb 2020 02:48 PM

அரசுப் பள்ளியில் வித்தியாசமான முறையில் பரிசு: தேர்வுகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பள்ளி அறக்கட்டளைகள் மூலம் கவுரவம்

புதுச்சேரி

புதுச்சேரி திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் பொதுத்தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு 11 கல்வி அறக்கட்டளைகளில் உள்ள வைப்பு நிதி மூலம் பரிசுகள் தரப்பட்டன.

புதுச்சேரி அரசுப் பள்ளிகளிலேயே கல்வி மற்றும் கல்வித் திட்டம் சாரா செயல்பாடுகளில் சிறப்புடன் விளங்குவதாக குடியரசு தினத்தில் திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி விருது பெற்றது. இப்பள்ளி மாணவிகள் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து சாதித்து வருகின்றனர்.

ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் அதிக அளவில் இங்கு படிக்கின்றனர். அவர்களின் திறமையைக் கவுரவிக்க இப்பள்ளியில் கல்வி அறக்கட்டளைப் பரிசளிப்பு விழா இன்று கொண்டாடப்பட்டது. பத்தாம் வகுப்பு மற்றும் 12 ம்- வகுப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பள்ளி தாவரவியல் விரிவுரையாளர் கோபால் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி துணை முதல்வர் செல்வசுந்தரி தலைமை வகித்தார். அவர் கூறுகையில், ''திருவள்ளுவர் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஆண்டுதோறும் நடைபெறும் பொதுத்தேர்வுகளில் சிறந்த இடங்களைப் பெற்று பள்ளிக்கு பெருமை தேடி வருவது மகிழ்ச்சி. இந்நிலை தொடர்ந்து சிறந்து விளங்க ஆசிரியர்களும், மாணவிகளும் மேன்மேலும் உழைத்து உயர்வு பெற வேண்டும்'' என்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சண்முகபிரியா, எஸ்.எம்.டி.சி. தலைவர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வணிகவியல் விரிவுரையாளர் ஜெயசீலி நன்றி கூறினார்.

மாணவர்களைக் கவுரவிக்கும் 11 கல்வி அறக்கட்டளைகள்
அரசுப் பள்ளிகளில் பெண் கல்வியை ஊக்குவிக்க இப்பள்ளியில் மொத்தம் 11 கல்வி அறக்கட்டளைகள் உள்ளன. பாப்புரேட்டி அறக்கட்டளை, எம். சொக்கலிங்கம் அறக்கட்டளை, கிரந்தே ஆண்டாள் துர்கா பிரசாத் அறக்கட்டளை, கமலா வெங்கட்ட அறக்கட்டளை, சிந்தாமணி கந்தப்பா அறக்கட்டளை (10, 12), கிருஷ்ணவேணி அம்மாள் அறக்கட்டளை, சி.சுப்ரமணியன் அறக்கட்டளை, மோகனா மோகன் அறக்கட்டளை, ஏபிடிஎஸ் அறக்கட்டளை, கோவிந்தசாமி சரஸ்வதி அறக்கட்டளை என மொத்தம் 11 அறக்கட்டளைகள் நிரந்தர வைப்பு நிதியை வைத்துள்ளன.

அறக்கட்டளைகளின் விருப்பப்படி குறிப்பிட்ட பாடங்களில் முன்னிலை பெற்றவர்கள் தொடங்கி ஏராளமான மாணவிகளுக்கு பல்வேறு பரிசுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. முன்னாள் ஆசிரியர்கள் தொடங்கி பலரும் இந்த அறக்கட்டளைகளை அமைத்து நிதி உதவி தந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x