Published : 14 Feb 2020 11:33 AM
Last Updated : 14 Feb 2020 11:33 AM

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி: பட்ஜெட்டில் ரூ.966.46 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று (பிப்.14) தொடங்கியது. இன்று காலை 10 மணிக்கு பேரவை கூடியதும், 2020-21-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டைத் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசினார்.

அதில், பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.34 ஆயிரத்து 181.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை முதல்வர் அறிவித்தார். அதில் 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.966.46 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களை போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்திக் கொள்ளவும், தகவல் தொழில்நுட்பங்களை அறிந்து, போட்டி நிறைந்த, கணினி சார்ந்த வேலை வாய்ப்புச் சந்தையில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காகவும் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.

தமிழக அரசின் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறையின் சார்பில், ‘எல்காட்’ நிறுவனம் மூலம் மடிக்கணினிகள் கொள் முதல் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இந்தத் திட்டம், மாணவர்கள், பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இளைய தலைமுறை வாக்காளர்கள் அதிமுகவின் வாக்கு வங்கியாக மாற இந்த திட்டம் பெரும் உதவி செய்தது.

எனினும் பல்வேறு இடங்களில் மடிக்கணினி சரியாக வழங்கப்படவில்லை என்று கூறி மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை 15.53 லட்சம் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்க ரூ.1,362 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

எனினும் அனைத்து பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி உறுதி என்ற திட்டம் தற்போது மாற்றப்பட்டுள்ளது. விலையில்லா மடிக்கணினியைப் பெற வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும், பிளஸ் 2-வுக்குப் பின்னர் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x