Published : 14 Feb 2020 10:34 AM
Last Updated : 14 Feb 2020 10:34 AM

3 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி: நியூஸி. லெவன் - இந்தியா இன்று மோதல்

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்குஇடையிலான முதலாவது டெஸ்ட் போட்டிவரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக நியூஸிலாந்து லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இப்போட்டி ஹாமில்டன் நகரில் இன்று தொடங்குகிறது.

இப்போட்டியில் நியூஸிலாந்து அணியின் முன்னணி வீரர்களான இஷ் சோதி, நீஷம், டிம் சீபிரெட் உள்ளிட்டோரும் விளையாடுவதால் இந்திய அணிக்கு நியூஸிலாந்து லெவன் கடுமையான சவாலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா, காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவேஅவருக்கு பதிலாக மயங்க் அகர்வாலுடன் தொடக்க ஆட்டக்காரராக யாரைஅனுப்புவது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

நியூஸிலாந்து ஏ அணிக்கு எதிராக சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடிய ஷுப்மான் கில்லை தொடக்க ஆட்டக்காரராக சேர்க்க வேண்டும் என்று ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் இந்திய அணிக்காக ஏற்கெனவே தொடக்க ஆட்டக்காரராக ஆடிஅனுபவம் பெற்ற பிருத்வி ஷாவுக்கு அந்தவாய்ப்பை வழங்கவேண்டும் என்று மேலும் சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெஸ்ட் தொடரில் கேப்டன் கோலி யாரைப் பயன்படுத்தப் போகிறார் என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்துவிடும். இன்றைய போட்டியில் களம் இறங்கும் வீரரே பெரும்பாலும் முதல் டெஸ்ட் போட்டியிலும் களம் இறங்க வாய்ப்பு உள்ளது. அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கும் இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சிறப்பாக பந்துவீசும் வீரர் டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அதேபோல் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புஜாரா, சாஹா, உமேஷ் யாதவ் உள்ளிட்டோரும் இன்றைய போட்டியில் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x