Published : 14 Feb 2020 08:19 AM
Last Updated : 14 Feb 2020 08:19 AM

ஒரே கல்வி நிலைய வளாகத்தில் எம்பிஏ, முதுநிலை டிப்ளமோ ஒன்றாக நடத்த தடை

எம்பிஏ, முதுநிலை டிப்ளமோ நிர்வாகவியல் படிப்புகளை ஒன்றாக நடத்தக்கூடாது என்று பல்கலைக்கழகங்களுக்கு ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) உறுப்பினர் செயலாளர் ராஜிவ் குமார்,அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: இந்திய மேலாண்மை கல்வி மையங்களில்(ஐஐஎம்) இருப்பதுபோல நிர்வாகவியல் பாடப்பிரிவில் முதுநிலை டிப்ளமா படிப்பை கற்றுத்தர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. ஆனால், காலப்போக்கில் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் நிர்வாகவியல் பாடத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பை வழங்கத் தொடங்கின.

இந்நிலையில் ஏஐடிசிஇ தற்போது வெளியிட்டுள்ள 2020-21-ம் ஆண்டுக்கான வழிகாட்டு கையேடு விதிகளின்படி, ஒருசேர எம்பிஏ மற்றும் முதுநிலை டிப்ளமோ (நிர்வாகவியல்) படிப்புகளை நடத்த முடியாது. இவை விதிகளுக்கு முரணான செயலாகும். எனவே, மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழக இணைப்பு அந்தஸ்து பெற்ற கல்வி நிறுவனங்கள் தங்கள் மையத்தில் உள்ள முதுநிலை டிப்ளமா (நிர்வாகவியல்) படிப்பை உடனே எம்பிஏவாக மாற்ற வேண்டும்.

மாறாக நிர்வாகவியல் பாடத்தில் முதுநிலை டிப்ளமாவை நடத்த விரும்பும் கல்வி மையங்கள் வேறு நிறுவன பெயரில் அந்த படிப்பை வழங்கலாம். எக்காரணம் கொண்டும் 2 படிப்புகளையும் ஒரே வளாகத்தில் நடத்தக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x