Published : 14 Feb 2020 07:59 AM
Last Updated : 14 Feb 2020 07:59 AM

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல்: அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் அறிவிக்கப்படுமா? - மாணவ, மாணவிகள் எதிர்பார்ப்பு

சென்னை

2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மாணவ, மாணவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. சத்துணவில்கலவை சாதம், பயறு, முட்டை, வாழைப்பழம், காய்கறிகள் என 13விதமான உணவுகள் வழங்கப்படுகின்றன.

சத்துணவு திட்டத்தால் தமிழகம் முழுவதும் 43 ஆயிரம் பள்ளிகளில் சுமார் 50 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருந்து வரும் சத்துணவு திட்டம் இந்தியாவில் ஒரு முன்னோடித் திட்டமாக திகழ்கிறது.

சத்துணவு திட்டம் காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிற்றல் குறைந்து, மாணவர் சேர்க்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

சத்துணவு திட்டத்தில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை போல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் காலை உணவுவழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 300-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

பள்ளிக்கு காலையில் வரும் மாணவர்களுக்கு இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும்இத்திட்டத்தை தமிழகம் முழுவதும்விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இத்தகைய சூழலில் 2020-2021-ம் நிதிஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார். இதில்,அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது நடைமுறையில் இருக்கும் உணவுப் பட்டியலில் சிலமாற்றங்கள் செய்து காலை உணவுதிட்டத்தில் பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி,கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கவும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும், வரும்கல்வி ஆண்டில் இருந்து காலைஉணவு திட்டத்தை அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அரசு பள்ளிகள் மற்றும் சத்துணவுமையங்களில் காய்கறி தோட்டம் அமைக்க வேண்டும் என்று அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அரசு மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x