Published : 13 Feb 2020 08:50 AM
Last Updated : 13 Feb 2020 08:50 AM

வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்: மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அதிகாரி அறிவுரை

மாணவர்கள் பாடப்புத்தகத்தை தாண்டி வாசிப்பு பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அதிகாரி திருஞானம் கூறினார்.

`இந்து தமிழ் திசை', வேலம்மாள் பொறியியல் கல்லூரி ஆகியவை இணைந்து 9 முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேனி, காரைக்குடி, திண்டுக்கல், நெல்லை, புதுக்கோட்டை ஆகிய 5 மண்டலங்களில் விநாடி- வினா போட்டியை நடத்தின.

மதுரை மண்டலத்துக்கான முதல் சுற்றுப் போட்டி விரகனூர் வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை காலை நடந்தது. இதை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறையின் மதுரை மாவட்ட உதவி திட்ட இயக்குநர் என். திருஞானம் தொடங்கிவைத்து பேசியதாவது:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்கிறோம். கற்றல், கற்பித்தல், தேர்வு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. நீண்ட விடைத்தாள் கொடுத்து எழுதுவது தவிர்க்கப்பட்டு, ஆன்லைனில்தேர்வெழுதுவதை நடைமுறைப்படுத்தும் காலம் வரும்.

எதிர் காலத்தில் விடைத்தாள் திருத்தும் முறை இன்றி, கொள்குறி (அப்ஜெக்டிவ்) தேர்வு முறையும் நடைமுறைப்படுத்தலாம் இதற்குவிநாடி- வினா போன்ற நிகழ்ச்சி பெரிதும் உதவும். இது மாணவர்களுக்கு விரிவான பார்வையை உருவாக்கும். தேர்வு முறை மட்டுமின்றி தேடலை ஏற்படுத்தும். வாசித்தல் என்பது முக்கிய தேவையாக இருக்க வேண்டும். பாடத்தை தாண்டி வாசிப்பு பழக்கத்தைவளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்து தமிழ் நாளிதழில் ஒவ்வொருநாளும் வரும் செய்திகள், கட்டுரைகள்பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள். இவ்வாறு அவர் பேசினார். வேலம்மாள் கல்விக் குழுமத் துணைத் தலைவர் கணேஷ் நடராஜன் சிறப்புரையாற்றினார்.

நெல்லை பள்ளி முதலிடம்

முதல் சுற்றில் வெற்றி பெற்ற 6 குழுக்களுக்கான (ஒரு குழுவில் 2பேர்) இறுதிச் சுற்றுப் போட்டி நடத்தப்பட்டது. குயிஸ் மாஸ்டர் ரங்கராஜ் போட்டியை நடத்தினார். இதில், நெல்லை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளிமாணவர்கள் எஸ். சபரிஸ், ஜி.அமோகா குழு முதலிடமும், காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் பள்ளி வி. ஹரினி,எஸ். மதுமதி குழு 2-ம் இடமும் பெற்றன.முதலிடம் பிடித்த குழுவுக்கு சைக்கிள், 2-ம் இடம் பிடித்த குழுவுக்கு சூட்கேஸ் வழங்கப்பட்டன. வேலம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x