Published : 13 Feb 2020 08:46 AM
Last Updated : 13 Feb 2020 08:46 AM

மாநில அளவிலான தரவரிசையில் கோவை: தேசிய மாணவர் படை முதலிடம்

மாநில அளவில் முதலிடம் பிடித்த கோவை தேசிய மாணவர் படையினரை என்.சி.சி அதிகாரிகள் பாராட்டினர்.

கோவை

கோவை தேசிய மாணவர் படை மாநில தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.

தேசிய மாணவர் படையின் (என்சிசி) சென்னை இயக்குநரகம் தமிழகம், புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இதன் கீழ் 50 தேசியமாணவர் படை குழுக்களும், ஒரு லட்சத்து20 ஆயிரம் தேசிய மாணவர் படைகளும் உள்ளன. இவற்றில் சிறப்பாக செயல்படும் தேசிய மாணவர் படைகளை வரிசைப்படுத்தி, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டுக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 6 இடங்களில் முதலிடம் உட்பட 3 இடங்களை கோவை தேசிய மாணவர் படைகள் பெற்றுள்ளன. இதன்படி தமிழ்நாடு 2 பீரங்கிப்படை 1,700-க்கு 1,158 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது. இதில் 8 கல்லூரிகள், 15 பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படைகள் அங்கம் வகிக்கின்றன.

இதை கொண்டாடும் வகையில், தேசிய மாணவர் படை சார்பில், 'பராக்கரம் 2020' என்ற கலை விழா கோவையில் நடைபெற்றது. இதையொட்டி தேசிய மாணவர் படையினரிடையே 3 கி.மீ. ஓட்டப்பந்தயம், அணிவகுப்பு போட்டி, விநாடி-வினா, திறன் போட்டி, நடனம், இசை உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.

இதில் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படையினர் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய மாணவர் படை அதிகாரி கிரீஷ் பார்த்தான் பரிசுகள் வழங்கினார். அவர் பேசும்போது, "கோவை தேசியமாணவர் படை தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடம் வகிக்கிறது. இதற்காக விருது மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசு கிடைத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவர்களின் சமூகப்பணி, குடியரசு மற்றும் சுதந்திர தினவிழா அணிவகுப்பு, முகாம்களில் பங்கேற்றல் என பல்வேறு பிரிவுகளில் மதிப்பெண் பெற்றது இந்த இடத்தை தக்க வைத்துள்ளோம். தொடர்ந்து முதலிடம் பெற முயற்சிப்போம்" என்றார்.

இவ்விழாவில் ராணுவ அதிகாரிகள் மூர்த்தி, மணிகண்டன், பால்பாண்டி, பகவான்சிங், தேசிய மாணவர் படை அலுவலர்கள் சுதாகர், ஆல்பர்ட் அலெக்ஸாண்டர், ஜீவா, ஜோசப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x