Published : 13 Feb 2020 08:26 AM
Last Updated : 13 Feb 2020 08:26 AM

கல்வி வழியாக வன்முறையை தடுக்கலாம்; சமூக உணர்வுகளைப் பயிற்றுவிக்கும் பாடத்திட்டம்: யுனெஸ்கோ நிறுவனத்தின் முயற்சி

குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் அறம் சார்ந்த திறன்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் வன்முறையைத் தடுக்க முடியும் என்ற இலக்குடன் புதுடெல்லியில் உள்ள யுனெஸ்கோ மகாத்மா காந்திஅமைதி கல்விக்கான நிறுவனம்செயல்பட்டுவருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் ஆனந்த துரையப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேராசிரியர் ஆனந்த துரையப்பா பேசியவை:

குழந்தை பருவத்திலேயே வெறுப்புணர்வு முளைக்கத் தொடங்கிவிடுகிறது. மற்ற நடத்தைச் சார்ந்தபண்புகளைப் போலவே வெறுப்புணர்வையும் வயதில் முதிர்ந்தவர்களிடம் இருந்துதான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். பாகுபாட்டுடன் நடந்துகொள்ளுதல், ஓரவஞ்சனையாக செயல்படுதல் , பிற்போக்கு மனோபாவம் உள்ளிட்ட தீய பண்புகளை பெரியவர்களைப் பார்த்து குழந்தைகள் பின்பற்றுகிறார்கள்.

அத்தகைய அணுகுமுறையின் வழியாகவே அவர்களும் வெளியுலகை அணுகத் தொடங்குகிறார்கள். குறிப்பாக இந்தியாவில் இந்த போக்கு அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண வேண்டுமானால் கல்வி அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

இந்நிலையில், உலகளாவிய குடியுரிமை பாடத்திட்டம் என்ற படிப்பை யுனெஸ்கோவின் மகாத்மா காந்தி அமைதி கல்விக்கான நிறுவனம் வடிவமைத்து இருக்கிறது. இதில் கதைகள், விளையாட்டுகள் மூலமாக நற்செயல்கள் குறித்த புரிதல் மாணவர்களுக்கு ஏற்படுத்தப்படுகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இளைஞர்களின் வாழ்க்கை கதைகள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வன்முறையை தடுக்க குழந்தைகளும் இளைஞர்களும் எத்தகைய பங்காற்ற முடியும் என்பது தொடர்பானஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.”

இவ்வாறு ஆனந்த துரையப்பா கூறினார்.

பள்ளி பருவத்தில் இருந்தே வன்முறை குறித்த புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதா என்ற கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளிக்கையில், “நரம்பியல் துறையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் உணர்வுகளுக்கும் அறிவாற்றலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆகையால் புத்திக்கூர்மையைக் குழந்தைகளுக்கு வளர்ப்பது போலவேஉணர்வுப்பூர்வமான விஷயங்கள்குறித்த பயிற்சியையும் அவர்களுக்குஅளிக்க வேண்டியது முக்கியம். சமூக-உணர்வுத் திறன்களை குழந்தைகளுக்கு கவனத்துடன் பயிற்றுவிக்க வேண்டும்.

சமூக-உணர்வுத் திறன்கள் என்றால், மற்ற கலாச்சாரங்களையும் பிற சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் கரிசனத்துடன் புரிந்துகொள்ளுதல். பிற சமூகத்தினருக்கு மதிப்பளித்தல். சுமுக உறவைப் பேணுவதன் மூலம் வன்முறை வெடிப்பதைதடுக்கலாம்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை சரியாக கையாளவும்பிளவுபடுத்தும் உணர்வுகளை கைவிடவும் கற்றுக்கொள்வார்கள். சாதி, மதம், இனம், நிறம், பாலினம் கடந்து பிற மனிதர்களுடன் நல்லுறவை பேண முடியும் என்பதைச் சிறார்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டம் இது.

சமூக-உணர்வுத் திறன்களை வளர்ப்பதன் மூலம் மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு உள்ளிட்ட உளவியல் சிக்கல்களையும் தவிர்க்கமுடியும். இந்த பாடத்திட்டமானது ஆசிரியர்களால் பள்ளி மாணவர்களுக்கு போதிக்கப்படுவதில்லை. மாறாக மாணவர்கள் சமகால பிரச்சினைகளான புலம்பெயர்தல், வன்முறைகுறித்த கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி, அதன் பாதகமான விளைவுகள் குறித்து கலந்துரையாட ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். ஏற்கெனவேதென் ஆப்பிரிக்கா, மலேசியா மட்டுமல்லாது சில இந்தியப் பள்ளிகளிலும் இதை சோதனை முயற்சியாகச் செய்து பார்த்திருக்கிறோம்.

குழந்தைகளிடம் நற்பண்புகளை வளர்ப்பது மட்டுமின்றி படிப்பில் முன்னேற்றம் காணவும் இந்த பாடத்திட்டம் உதவி இருக்கிறது. எங்களுடைய தெற்காசியப் பயிலரங்கம் இம்மாதம் இலங்கையில் நடக்க இருக்கிறது. அதில் இந்தியா, பாகிஸ்தான், மியான்மார், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.”

இவ்வாறு அனந்த துரையப்பா விளக்கம் அளித்தார்.

சமூக உணர்வுத் திறன்களைப்பயிற்றுவிக்க யுனெஸ்கோ நிறுவனம்வடிவமைத்திருக்கும் உலகளாவிய குடியுரிமை பாடத்திட்டம் விரைவில் அனைத்து இந்திய பள்ளிகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x