Published : 12 Feb 2020 09:44 AM
Last Updated : 12 Feb 2020 09:44 AM

கடல் ஓசை சமுதாய வானொலியில் மாணவர்களுக்கு வானொலி தொகுப்பாளர் பயிற்சி

ராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் உள்ள கடல் ஓசை சமுதாய வானொலி நிலையத்தில் நிகழ்ச்சியை தொகுத்து அளித்த பள்ளி மாணவர்கள்.

ராமேசுவரம்

வானொலி என்ற சக்தி வாய்ந்த தகவல் தொடர்பு சாதனத்தை மார்கோனி 1894 -ம் ஆண்டு கண்டுபிடித்தார். கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாகஉலக மக்களுக்கு வெறும் பொழுதுபோக்கு சாதனமாக மட்டுமின்றி கல்விஅளிக்கும் தகவல் களஞ்சியமாகவும் வானொலிகள் செயல்படுகின்றன.

இன்று தொலைக்காட்சி, இணையம், கைபேசி எனப் பல்வேறு தொடர்பு சாதனங்கள் வந்தாலும் வானொலிக்கு என்றுமே தனி இடம் உண்டு. குறிப்பாக புயல், வெள்ளம், பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் முடங்கிப்போகும் தருணங்களில் வானொலியின் பங்கு மிகப்பெரியது. இதனால் தான் இன்றும் உலக அளவில்1 லட்சத்துக்கும் மேற்பட்ட வானொலி நிலையங்கள் இயங்கி வருகின்றன.

யுனெஸ்கோவின் 36-வது பொதுச்சபைக் கூட்டத்தில் வானொலியை ஒரு ஊடகமாகக் கொண்டு, தகவல்மற்றும் தகவல் சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்தவும், ஒலிபரப்பாளர்களிடையே ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு, வானொலிகளை ஊக்கப்படுத்த வேண்டும் எனும் நோக்கில் பிப்ரவரி 13-ம் தேதி உலக வானொலி தினமாக அறிவித்தது.

உலகிலேயே முதல் முறையாக ராமேசுவரம் அருகே பாம்பனில் நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் மீனவர்களுக்காக பிரத்யேகக்கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம் 90.4 அலைவரிசையில் இயங்கி வருகிறது. இதில் அகிலஇந்திய வானொலி நிலையங்களில் கூட சிறுவர்கள் மற்றும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் ஒலிபரப்புவது அரிதாகி வரும் நிலையில் கடல் ஓசை சமுதாய வானொலி நிலையம் பள்ளி மாணவர்களுக்கு வானொலி தொகுப்பாளர் பயிற்சி அளித்து வருகிறது.

இது குறித்து கடல் ஓசை வானொலியின் நிறுவனர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ கூறியபோது: கடல் ஓசைசமுதாய வானொலி நிலையம் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் குறிப்பாக மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான நிகழ்ச்சிகளை மட்டும் தயாரிக்காமல் ராமேசுவரம் தீவு அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தபள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வானொலி தொகுப்பாளர் களுக்கான பயிற்சி அளித்து வருகிறோம்.

இதில் குறிப்பாக குழந்தைகள் குழு விளையாட்டு, கதை நேரம், குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகள் திருமணம் ஒழிப்பு, பெண் குழந்தைகளுக்கான கல்வி முக்கியம் குறித்த நிகழ்ச்சிகளைப் பள்ளி மாணவர்களே தொகுத்து வழங்குவதால் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதன் மூலம் செல்போன், தொலைக்காட்சி, இணையதளங்களில் மூழ்கிக் கிடைக்கும் மாணவர்களை மாற்று ஊடகமான வானொலியின் பக்கம் ஈர்க்க முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x