Published : 12 Feb 2020 08:22 AM
Last Updated : 12 Feb 2020 08:22 AM

தமிழக அரசு, கேர் எர்த், அமெரிக்க துணை தூதரகம் ஏற்பாடு: சென்னையில் ‘நீரின்றி அமையாது உலகு’ கண்காட்சி தண்ணீரை சேமிக்க வழிமுறைகள் சொல்லலாம்

தண்ணீரின் முக்கியத்துவம் குறித்த கண்காட்சி சென்னையில் தொடங்கி உள்ளது. இந்தக் கண்காட்சி 29-ம்தேதி வரை நடைபெறுகிறது. இதில் தண்ணீரை சேமிப்பதற்கான யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசு, ‘கேர் எர்த்’ அறக்கட்டளை, ஸ்மித்சோனியன் டிராவலிங் ஆகியவற்றுடன் இணைந்து தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும், ‘நீரின்றி அமையாது உலகு’ கண்காட்சிக்கு அமெரிக்க துணை தூதரகம்ஏற்பாடு செய்துள்ளது. சென்னை, கோட்டூர்புரம் பகுதியில் உள்ள, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், கடந்த திங்கட்கிழமை கண்காட்சி தொடங்கியது.

இந்தக் கண்காட்சி நேற்று முதல்பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது. வரும் 29-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல்மாலை 5.30 மணி வரை கண்காட்சியைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய, அமெரிக்க துணைத் தூதர்ராபர்ட் ஜி பர்கஸ், ‘‘மக்களுடன் கலந்துரையாடும் வகையில் இந்தக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிலையான நீர் மேலாண்மை தொடர்பான சவால்கள் மற்றும் தீர்வுகளை ஆராய பொதுமக்கள் ஆலோசனைகள் கூறலாம். குறிப்பாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.

‘Water Matters’ என்ற தலைப்பிலான இந்த கண்காட்சியில், விஞ்ஞானம், புதுமைகள் மற்றும் நிலையான நீர் மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 53 பேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தகவல் மையங்கள், கலந்துரையாடும் கற்றல் பரிசோதனைகள் ஆகியவையும் இதில் அடங்கும்.

தண்ணீருக்கு முக்கியத்துவம் தரும் கருத்துகளுடன் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கண்காட்சியில் உரையாற்றுவது, அறிவியல் பயிலரங்கம், கலாச்சார நிகழ்ச்சிகள் போன்றவற்றை சென்னை நகரின் பல பகுதிகளில் நிகழ்த்த அமெரிக்க துணை தூதரகம் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான நிகழ்ச்சி நிரல்கள், காலண்டர் உட்பட விரிவான தகவல்கள் அமெரிக்க துணை தூதரகத்தின் முகநூல் http://www.facebook.com/chennai.usconsulate என்பதில் வெளியிடப்பட்டுள்ளது.

விழாவில் பங்கேற்ற ஏ.ஆர்.ரஹ்மான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஏழை, பணக்காரர் யாராக இருந்தாலும் சரி. குடிக்கும் தண்ணீர்எல்லோருக்கும் குழாயில் வரவேண்டும். நீரில் பாகுபாடு பார்க்கக்கூடாது. நாம் தற்போது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடித்து வருகிறோம். தண்ணீர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமையாகும்.

தண்ணீருக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்டால், இன்னும் 15 ஆண்டுக்குள் தீர்வு கண்டுவிடலாம். உலக வெப்பமயமாதல் தொடர்பாக ‘ஹேண்ட்ஸ் அரவுன்ட் தி வேர்ல்டு’என்ற தலைப்பில் உலக இசைக் கலைஞர்களை கொண்டு விழிப்புணர்வு கீதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். இந்த கீதம் இன்னும் 2 மாதத்தில் வெளிவரும்.

நீடித்த நீர் நிர்வாகத்தை மேம்படுத்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்த அமெரிக்க துணைத் தூதரகத்துக்கு வாழ்த்துக்கள். தண்ணீர் நம் வாழ்க்கைக்கு முக்கியம். நமது வளங்களை பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு தூய்மையான நீரை விட்டுச் செல்ல வேண்டும். அதை நாம் உறுதி செய்வது முக்கியம். இந்த கண்காட்சி தண்ணீரை சிக்கனமான முறையில் பயன்படுத்த மக்களுக்கு நினைவூட்டும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார்.

கேர் எர்த் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் பேசுகையில், ‘‘சென்னையில் போதிய அளவுக்கு மழைப் பொழிகிறது. இங்கு நான்கு ஆறுகள் உள்ளன. கடலோரமும் உள்ளது. அப்படி இருந்தும் சில நேரம் சென்னை நகரம் வெள்ளக்காடாக மாறுகிறது. சில நேரம் வறட்சியால் பாதிக்கிறது. எனவேதான், Water Matters கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளோம். மக்களின் ஒத்துழைப்புடன், தண்ணீர் சேகரிப்பு குறித்த வழிமுறைகளை உருவாக்க உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x