Published : 12 Feb 2020 08:14 AM
Last Updated : 12 Feb 2020 08:14 AM

அதிநவீன கேமராக்களுடன் சூரியனை ஆய்வு செய்யும் விண்கலம் விண்ணில் செலுத்தியது நாசா

சூரியனை மிக அருகில் இருந்து ஆய்வு செய்யும் ‘சோலார் ஆர்பிட்டர்’ என்றஅதிநவீன விண்கலத்தை, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனம்நாசா விண்ணில் செலுத்தியது.

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தைத் தொடர்ந்து சூரியனையே மிக அருகில் இருந்து ஆய்வு செய்யும்திட்டத்தை நாசா செயல்படுத்தி வருகிறது. இதற்காக அதிக வெப்பத்தைத் தாங்கும் விண்கலத்தை வடிவமைத்திருந்தது. ‘சோலார் ஆர்பிட்டர்’ என்று அந்த விண்கலத்தைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது நாசா. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் இந்த திட்டத்தில் கைகோத்துள்ளது.

இதில் சூரிய பல கோணங்களில் படம் பிடிக்கும் அதிநவீன கேமராக்கள் மற்றும் ஏராளமான ஆய்வுக் கருவிகள் அடங்கியுள்ளன. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கேனவரல் ஏவுதளத்தில் இருந்து, கடந்த ஞாயிறுக்கிழமை இரவு 11.03 மணிக்கு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் ‘சோலார் ஆர்பிட்டர்’ விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

இந்த விண்கலம், சூரியனின் மேற்பரப்பையும், அதில் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களையும் மிகத் துல்லியமாகப் படம்பிடிக்கும். அத்துடன் சூரிய கதிர்வீச்சுகள் மற்றும் வெடிப்புகள் மூலம் ஏற்படும் ரசாயன மாற்றங்களையும் சோலார் ஆர்பிட்டர் விண்கலம் பதிவு செய்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.

சூரியனை அதன் மேற்பரப்பில் இருந்து, 26 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் சோலார் ஆர்ப்பிட்டர் ஆய்வு செய்யும்.

விண்ணுக்கு சென்ற சோலார் ஆர்பிட்டரின், சூரிய தகடுகள் வெற்றிகரமாக விரிவடைந்ததற்கான சிக்னல்கள் ஜெர்மனியில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு கிடைத்துள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விண்ணில் சோலார் ஆர்பிட்டர் முதல் 2 நாட்களுக்கு தனது கருவிகள் மற்றும் ஆன்டனாக்களை விரிவடைச் செய்யும். முதல் 3 மாதங்களுக்கு விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள முக்கிய கருவிகள் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று ஆய்வு செய்யப்படும். அதன்பின் விண்கலம் சூரியனின் இலக்கு சுற்றுவட்ட பாதையை சென்றடைய 2 ஆண்டுகள் ஆகும்.

இதில் உள்ள சில கருவிகள் விண்கலத்தை சுற்றி நிலவும் மின்சாரமற்றும் மின்காந்த சூழல்கள், சூரியனில் வெளிப்படும் துகள்கள், அலைகள் ஆகியவற்றை ஆய்வு செய்துதகவல் அனுப்பும். விண்கலத்தில்உள்ள தொலை உணர்வு கருவிகள்சூரியனை தொலைவில் இருந்து படம்பிடித்து தகவல்கள் அனுப்பும். இதுசூரியனின் பிழம்புக்குள் நடக்கும் செயல்பாடுகளை அறிந்து கொள்ள உதவும். இந்த ஆய்வுகள் அடுத்த ஆண்டு நவம்பர் வரை தொடரும்.

முன்னதாக நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் இணைந்து ‘யுலிசஸ்’ என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு மேற்கொண்டன. இது சூரியனை சுற்றியுள்ள விண்வெளிப் பகுதியை, விஞ்ஞானிகள் முதன்முதலில் அளவிட உதவியது. தற்போது அனுப்பட்டுள்ள சோலார் ஆர்பிட்டரில் கேமிராக்கள் உள்ளதால், அது சூரியனின் துருவபகுதியை முதன் முதலாக படம்பிடித்து அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x