Published : 11 Feb 2020 08:17 AM
Last Updated : 11 Feb 2020 08:17 AM

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு அழுத்தத்தை சமாளிப்பது எப்படி?

சென்னை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகள் படிக்கும்மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளும் இதர வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வுகளும் நெருங்கிவிட்டன. இரவு-பகல் என எல்லா நேரமும் தேர்வு என்ற சொல் மட்டுமே எல்லா திசைகளிலும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டது.

காலை எழுந்தவுடன் படிப்பு... பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலை முழுதும் விளையாட்டு... என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா என்பதெல்லாம் வழக்கொழிந்து போய்விட்டது. அதிகாலை, காலை, மதியம், மாலை, இரவு, நடுநிசி என எந்நேரமும் புத்தகமும் கையுமாக மாணவர்கள் இருக்க வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. இதனால் தேர்வு அழுத்தமும் தேர்வு குறித்த பதற்றமும் பல மாணவர்களை துரத்திக் கொண்டிருக்கின்றது.

பயத்துடன் படித்தால்தான் மாணவர்கள் ஒழுங்காகப் படிப்பில் கவனம் செலுத்துவார்கள் என்ற பொதுப்புத்தி உள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான புரிதலாகும். தேர்வு பதற்றமானது உடல் ஆரோக்கியத்தைக் கடுமையாக பாதிக்கக்கூடும். இதனால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். உறக்கம் கெட்டுப்போகும். இப்படி இருக்க சரியான ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம் தேர்வு அச்சத்தையும் பதற்றத்தையும் அழுத்தத்தையும் போக்கலாம். அதுமட்டுமின்றி தேர்வுக்கான தயாரிப்பை எளிமையாக்கலாம்.

எல்லா பதற்றங்களும் ஒன்றல்ல. வெவ்வேறு நிலைகளில் பதற்றம் ஏற்படுகிறது. கட்டுக்கடங்காத நிலைக்கு செல்லும்போதுதான் மீளமுடியாத அபாயம் ஏற்படும். முதலாவதாக நமக்குஎந்த விதமான பதற்றம் ஏற்படுகிறது என்பதை சுதாரித்து கொண்டாலே அதில் இருந்து எளிதில் விடுபடலாம்.

பாடங்களை சரியாகப் படித்துத்தேர்வுக்கு தயாராகாமல் காலங்கடத்திவிட்டதால் உண்டாகும் மன உளைச்சல்.

கண்ணும் கருத்துமாகக் கவனம் செலுத்தி படித்தும் தேர்வறையில் பதைபதைப்பு உண்டாகுதல். இதனால் தேர்வை சிறப்பாக எழுத முடியாமல் தடுமாறுதல். இப்படிப்பட்ட பதற்றம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. ஏற்கெனவே ஒரு முறை தேர்வில் எதிர்பாராத தோல்வி அடைந்திருக்கலாம்.

தான் பலமுறை சிறப்பாக எழுதிய போதும் ஒரு முறை தோல்வி அடைந்ததையே திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கலாம். இந்த மனநிலை இனி வரும் தேர்வுகளிலும் அன்று போலவே தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தை உண்டாக்கலாம். இந்த எண்ணம் ஒன்றே அவர்களை நிலைகுலையச் செய்யலாம்.

சில பாடங்கள் குறித்தோ அல்லது சில ஆசிரியர்கள் குறித்தோ கசப்பான தகவல்களைக் கேட்டுகேட்டு அதனை மனதில் பதிய வைத்தல். இதே சிந்தனை சதாசர்வ காலமும் மனதில் ஓட பதற்றமடைதல். தான் எதற்கும் லாயக்கற்றவர், எப்போதுமே தோற்பவர் என்பது போன்ற எதிர்மறை எண்ணங்கள் சிலரை வாழ்நாள் முழுவதும் துரத்தக் கூடும்.

தேர்வு அழுத்தத்தைச் சமாளிப்பதற்கான வழிமுறைகள் இதோ:

எத்தகைய பதற்றமானாலும் அவற்றை தவிர்க்கவும் கட்டுப்படுத்தவும் பல வழிகள் உள்ளன. உங்களுக்கு ஏற்படுவது பகுத்தறியக்கூடிய பதற்றம் என்றால் முன்கூட்டியே தயாரிப்புக்கான அட்டவணையை எழுதி அதன்படி தேர்வுக்குத் தயாராக வேண்டும். சுயக்கட்டுப்பாட்டை கொஞ்சம் வளர்த்துக்கொண்டாலே திட்டமிட்டபடி படித்து சிறப்பாக தேர்வெழுதலாம்.

உதாரணத்துக்கு, ஜன்னலை பார்த்தபடி உட்கார்ந்து படித்தால் வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள் என்றால் அதை தவிர்க்கலாம். அதற்கு பதிலாகசுவரை நோக்கி உட்கார்ந்து படிக்கலாம்.

அடுத்து, உங்களுடைய சிந்தனையை மட்டுப்படுத்தவும் கட்டுப்படுத்தவும் பழகிக் கொள்ள வேண்டும். எதிர்மறையான எண்ணங்கள் துளிர்க்கும் போது அதை சட்டைசெய்யாமல் நேர்மறையான சிந்தனைக்குள் கவனத்தை குவிக்க பழக்க வேண்டும்.

இறுதியாக, அனைத்து விதமானபதற்றங்களுக்கும் தீர்வு தன்னம்பிக்கை மட்டுமே. தேர்வறையில் அச்சம் உங்களை அழுத்தும் போது ஒரு நொடி அதில் இருந்து விலகி ஆழமாக மூச்சிழுத்து விடுங்கள். ஆசுவாசமாக தேர்வை எழுதத் தொடங்குங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x