Published : 10 Feb 2020 06:17 PM
Last Updated : 10 Feb 2020 06:17 PM

நீட் தேர்வு விண்ணப்பம்: திருத்துவதற்கான கால அவகாசம் நிறைவு; அடுத்து என்ன?

நீட் தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தைத் திருத்துவதற்கான கால அவகாசம் நேற்று இரவுடன் நிறைவு பெற்றது.

பொது மருத்துவம், பல் மருத்துவம், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட்) வரும் மே மாதம் 3-ம் தேதி நடைபெறுகிறது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடியும் என்று ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் இதற்கான காலக்கெடு, ஜனவரி 6-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதற்கிடையே விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்த முடியாதவர்களுக்காக மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. பிப்ரவரி 3-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் தேதி வரை விண்ணப்பச் சாளரம் மீண்டும் திறக்கப்பட்டது.

அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மத்திய, மாநில அரசுகளின் இட ஒதுக்கீடுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துக்கான சீட்டைப் பெறலாம். மார்ச் 27-ம் தேதி நுழைவுச் சீட்டுகளை தேசியத் தேர்வு முகமை வெளியிட உள்ளது.

நீட் தேர்வு மே 3-ம் தேதி மதியம் 2 மணி முதல் 5 மணி வரை (3 மணிநேரம்) தேர்வு நடைபெறும். தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெற உள்ளது. கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x