Last Updated : 10 Feb, 2020 02:31 PM

 

Published : 10 Feb 2020 02:31 PM
Last Updated : 10 Feb 2020 02:31 PM

ஆரோவில்லில் உலக தரம் வாய்ந்த நாடகங்கள்: அனுமதி இலவசம்- பிப். 12 முதல் 18 வரை நடக்கிறது 

புதுச்சேரி

டெல்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில் உலக தரம் வாய்ந்த நாடகங்களை பிப்ரவரி 12 முதல் 18-ம் தேதி வரை ஆரோவில்லில் நடக்கின்றன. இந்திய மற்றும் வெளிநாட்டு நாடகக் குழுக்களின் பல்வேறு நாடகங்களை பார்வையாளர்கள் இலவசமாக பார்க்கலாம்.

இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரேயொரு அமைப்பான தேசிய நாடகப்பள்ளி கடந்த 1959-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக நாடுகளின் தலைசிறந்த நாடகப்பயிற்சி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. சங்கீத நாடக அகாடமி வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் இப்பள்ளி நாடகத்துறையின் அனைத்து பிரிவுகளிலும் பயிற்சி வழங்கி வருகிறது. இந்நிலையில் முதல்முறையாக ஆரோவில்லில் டெல்லி தேசிய நாடகப்பள்ளி சார்பில் நாடகத் திருவிழா நடைபெறுகிறது.

இதுகுறித்து தேசிய நாடகப் பள்ளியின் கல்வியியல் புலமுதன்மையர் அபிலாஷ் பிள்ளை கூறுகையில், உலகத்தரம் வாய்ந்த நாடகங்கள் பிப்ரவரி 12 முதல் 18 வரை நடக்கிறது. வரும் 12-ம் தேதி மாலை 6.30 மணிக்கு திரைப்பட இயக்குநரும் நடிகருமான நாசர், புதுச்சேரி தலைமைச்செயலர் அஸ்வனிகுமார் முன்னிலையில் இணை நாடக விழா ஆரோவில் ஆதிசக்தி அரங்கில் தொடங்குகிறது.

தேசிய நாடகப்பள்ளி தலைவரும் முனைவருமான அர்ஜூன் தியோ சரண் தலைமை வகிக்கிறார். தொடக்க நாளில் சுவீரன் எழுதி இயக்கிய பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும் என்ற மலையாள நாடகம் நிகழ்த்தப்படும். இந்நாடகம் பால்சக்கரியாவின் குறுநாவலை தழுவி எழுதப்பட்ட நாடகமாகும்.

இவ்விழா நாடக ஆர்வலர்களுக்கு உன்னத அனுபவம் தரும். இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம் மற்றும் ஒரிய மொழிகளில் தலா ஒன்று, வங்க தேசம் மற்றும் செக் குடியரசு நாட்டு நாடகங்கள் முறையே வங்கம் மற்றும் ஆங்கிலத்தில் நடக்கும். மொத்தம் 7 நாடகங்களை பார்க்கலாம். அனுமதி இலவசம். பங்கேற்பாளர்களுக்கு அனுமதி இலவச கூப்பன்களும் விநியோகிக்கிறோம்.

குறிப்பாக 13-ம் தேதி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம் தமிழ் வடிவில் ரோமன் ரோலண்ட் வீதியில் உள்ள இன்டியனோஸ்ட்ரம் தியேட்டரில் நடக்கிறது. அதையடுத்து வரும் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை ஆதிசக்தி அரங்கில் நாடகங்கள் நடைபெறும். 14-ம் தேதி கன்னட நாடகம் பர்ஷிவா சங்கீதாவும், செக் குடியரசு தரப்பில் 15-ம் தேதி ஷேக்ஸ்பியரின் ரிட்டச்சர்ட் 3 ஆங்கிலத்திலும் நடக்கும்" என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து பேராசிரியர் ராஜூ கூறுகையில், "தரமான நாடகங்களை மக்கள் பார்வைக்குக் கொண்டு வரவே இம்முயற்சி. நாடகக் கலையில் வளரும் கலைஞர்கள் மேடையளித்து ஊக்குவிப்பதையும் இந்நாடகங்களில் காணலாம். இது பார்வையாளர்கள் மத்தியில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். நாடகங்கள் மட்டுமில்லாமல் 7 நாட்களிலும் நாடகத்துக்கு முன்னதாக நாட்டார் கலைகள், பாரம்பரிய நடன நிகழ்வுகளும் நடக்கும். குறிப்பாக செக் குடியரசு நாடகத்தில் அம்பாசிடரும் நடிப்பு கலையில் பங்கேற்பது சிறப்பான விஷயம்" என்று குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x