Published : 10 Feb 2020 10:37 AM
Last Updated : 10 Feb 2020 10:37 AM

குடியிருப்பு பகுதியில் இயங்கும் தொழிற்சாலைகள் வேறு இடத்துக்கு மாற்றம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி உத்தரவு

குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் தொழிற்சாலைகளை வேறு இடத்துக்கு மாற்ற மகாராஷ்டிர மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சி நிர்வாகம், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழில்துறை மேம்பாட்டுத்துறை உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டம் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் கல்யாணில் நடந்தது. இதில் டொம்பிவிலி நகரத்தில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறித்து விவாதம் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியதாவது:

டொம்பிவிலியில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் ரசாயனக் கழிவுகளால் பொதுமக்களுக்கு உடல்நலன் சார்ந்த பிர்ச்சினைகளும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பும் ஏற்படுவதாக புகார் வந்துள்ளது. இதனையடுத்து, குடியிருப்புபகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளை வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும், குடியிருப்பில் இருந்து அகற்றப்பட்ட தொழிற்சாலைகளை வேறு இடத்தில் நிறுவ தேவையான இடங்களை தேர்வு செய்ய 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அபாயகரமான தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் மாசுகளை கட்டுப்படுத்தவும், கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையர் தலைமையிலான குழு கண்காணிக்க வேண்டும்.

இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், நகரங்களின் ஓரங்களில் நிறுத்தப்பட்ட பழைய மற்றும் பழுதடைந்த கார்களை அகற்ற கொள்கை முடிவு விரைவில் எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x