Published : 10 Feb 2020 10:30 AM
Last Updated : 10 Feb 2020 10:30 AM

இந்திய நகரங்கள் வெப்ப தீவுகளாக காட்சி அளிக்கின்றன: கோரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தகவல்

கொல்கத்தா

இந்தியாவில் உள்ள பெரும்பாலான நகரங்கள் வெப்ப தீவு போன்று மாறியுள்ளதாக கோரக்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

கோரக்பூர் ஐஐடியில் உள்ள கடல்கள், நதிகள் ஆராய்ச்சி மையம், வளிமண்டலம் நில அறிவியல் துறை, கட்டிடக் கலை, பிராந்திர திட்டமிடல் துறை ஆகியவை இணைந்து இந்திய நகரங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன.

அதில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் இந்திய நகரங்களில் பகல் நேரங்களில் மிக அதிகமான வெப்பநிலையும், இரவு நேரங்களில் அதிக வெப்பநிலையும் உள்ளது. நகர்ப்புறங்களை காட்டிலும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வெப்பநிலை குறைவாகவே உள்ளது. இதனால், இந்திய நகரங்கள் வெப்ப தீவுபோன்று உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஐடி பேராசிரியர் அருண் சக்கரவர்த்தி கூறியதாவது: இந்தியாவில் உள்ள 44 முக்கிய நகரங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் வெப்பநிலை குறித்து 2001 முதல் 2017-ம் ஆண்டு வரையிலான தரவுகளை வைத்து மிக கவனமாக ஆய்வு செய்தோம். அதன்படி, வெயில்காலம், மழை காலம் போன்ற அனைத்து காலகட்டத்திலும், கிராமப்புறங்களை காட்டிலும் நகர்ப்புறங்களில் சுமார் 2 செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக உள்ளது.

இதனால்தான் நகரங்களை வெப்ப திவுகள் என்று குறிப்பிட்டுள்ளோம்.

பருவமழைக்கும் பிந்தைய காலத்தில் செயற்கைக்கோள் தரவுகள் மூலம் நகரங்களின் வெப்பநிலையை ஆராய்ந்தோம். அப்போது கொல்கத்தா, புனே,குவாஹாத்தி போன்ற நகரங்களை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை அதிகமாக உள்ளது.

இதன்விளைவாக, அந்த நகரங்களின் மேற்பரப்பில், மேம்படுத்தப்பட்ட குளிரூட்டும் விளைவு ஏற்பட்டு வெப்பநிலை குறைவாக உள்ளது. இவ்வாறு அருண் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, ஆய்வறிக்கையின் இணை ஆசிரியர் ஜெயநாராயணன் கூறியதாவது:

சில நகரத்தின் வெப்பநிலை குறைவாக இருப்பதற்கு அதன் எல்லை குறைவாக இருப்பதும், அதன் அருகில் இருக்கும் பகுதிகள் பசுமையாக இருப்பதும்தான் காரணமாகும். நகர்ப்புறங்களை சுற்றி இருக்கும் நீர்நிலைகளை பாதுகாப்பது மற்றும் பசுமை பகுதிகளை விரிவாக்கம் செய்வதால் வெப்பநிலையை குறைக்க முடியும்.

நகரங்களில் அமைக்கப்படும் கட்டிடங்களையும் அதன் உள்கட்டமைப்புகளை சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத பொருட்களை கொண்டு வடிவமைக்கும்போதும் வெப்ப தீவின் வெப்பநிலையை குறைக்க முடியும். இவ்வாறு ஜெயநாராயணன் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x