Published : 07 Feb 2020 08:29 AM
Last Updated : 07 Feb 2020 08:29 AM

செய்திகள் சில வரிகளில்: ஆதார் விவரம் தந்தால் உடனடி ‘இ பான்’ கார்டு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி

நாடாளுமன்றத் தில் கடந்த 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், ஆதார் விவரங்களை ஆன்லைனில் தந்தால், உடனடியாக இ பான் கார்டு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இத்திட்டம் இந்த மாதமே செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய வருவாய்த் துறை செயலர் அஜய் பாண்டே கூறும்போது, ‘‘வருமான வரித் துறை இணையதள முகவரியில் சென்று, ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்.

அப்போது, ஆதார் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் போனுக்கு ஒரு முறை பயன்படுத்தும் கடவு எண் (ஒன் டைம் பாஸ்வேர்டு) அனுப்பப்படும்.

அதை பதிவு செய்தவுடன் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, உடனடியாக இ பான் கார்டு வழங்கப்படும். அதை பயனாளர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்று தெரிவித்தார்

- பிடிஐ

மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு

மாமல்லபுரம்

கரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சீனா உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, மாமல்லபுரத்துக்கு வரும் சீன நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. 2 லட்சம் பேர் வரை விசா கேட்டு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூலம் நோய்த் தொற்று பரவும் என்ற அச்சத்தால், மாமல்லபுரம் வரும் பிற நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் இப்போது பெருமளவு சரிந்துள்ளது.

ஏற்கெனவே, கடந்த 2019-ம் ஆண்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 65 ஆயிரமாக குறைந்தது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x