Published : 07 Feb 2020 08:10 AM
Last Updated : 07 Feb 2020 08:10 AM

கேரள மாநிலத்தில் 105 வயது மூதாட்டி 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று சாதனை

கேரள மாநிலம் கொல்லம் நகரத்தில் வசித்து வருபவர் பாகீரதி அம்மா. 105 வயதான மூதாட்டி, தனது 9-வது வயதில் 3-ம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தார். அப்போது, அவரின் தாயார் உடல்நலம் பாதிப்பினால் உயிரிழந்தார். இதனால், அம்மாஇல்லாத இடத்தை நிரப்ப, தனதுபடிப்பை பாதியிலேயே நிறுத்தினார்.

இதன்பின்னர், திருமணம் ஆகி 6 குழந்தைகளுக்கு தாயானார் பாகீரதி. ஆனாலும், கல்வி மீது இருந்த பற்று அவருக்கு மாறவே இல்லை. இதுகுறித்து தனது குழந்தைகளிடமும், கணவரிடமும் அடிக்கடி கூறிவந்துள்ளார்.

பாகீரதிக்கு 30 வயது இருக்கும்போது, கணவரும் இறந்துபோனார். இதனால், விரக்தியின் எல்லைக்கு போன பாகீரதி, தனது குழந்தைகளுக்காக அயராது உழைக்க தொடங்கினார். கூலி வேலைக்கு சென்று, தனது 6 குழந்தைகளையும் படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்தார். பேரன் பேத்தி, கொள்ளு பேரன் வரை கண்ட பாகீரதிக்கு, கல்வி மீது இருந்த காதல் மாறவே இல்லை.

இந்நிலையில்தான், மாநில எழுத்தறிவு இயக்கத் திட்டத்தின் கீழ், கல்வி கற்க வாய்ப்பிழந்தோர், அந்தந்த வகுப்புகளுக்கு இணையான படிப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறலாம் என்ற புதிய திட்டத்தை கேரள அரசு கொண்டு வந்தது.

இதைபற்றி அறிந்த பாகீரதி அம்மாளுக்கு மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையே கிடைக்கவில்லை. தனது மகன் உதவியுடன், 4-ம் வகுப்புக்கு இணையான கல்வியை பெற விண்ணப்பித்து, அதற்கான வகுப்புகளுக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், பாகீரதி அம்மாவுக்கான 4-ம் வகுப்பு தேர்வு கடந்தசில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்றது. வயதான காரணத்தால் தோ்வுகளை எழுத சிரமப்பட்ட போதிலும், சுற்றுச்சூழல், கணிதம், மலையாளம் பாடங்களின் தேர்வைஎந்த ஒரு பயமும் இல்லாமல், தான் படித்ததை வைத்து, துணிச்சலாக தேர்வு எழுதினார் பாகீரதி அம்மா.

இந்நிலையில், தேர்வின் முடிவுகளை கேரள பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டது.

அதில், மொத்தம் 275 மதிப்பெண்ணுக்கு 205 மதிப்பெண் பெற்று பாகீரதி அம்மா 4-ம் வகுப்பில் தோ்ச்சி பெற்று அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை பாட்டியாகவும் மாறியுள்ளார்.

இந்த தகவல் அறிந்த கேரள மாநில எழுத்தறிவுப் பணி இயக்குநர்பி.எஸ்.கலா பாகீரதி பாட்டியை நேரில் சென்று சந்தித்து பாராட்டுதெரித்து, ஆசியும் பெற்றார். அதுமட்டுமல்லாது, தான் தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மிகவும் ஆா்வமாகஇருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது உள்ள மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கல்வி என்பது வேப்பங்காயாக கசக்கிறது. ஆனால், 9 வயதில் தான் தொடரமுடியாத கல்வியின் சுவையை 105 வயதில் சுவைத்துள்ளார் பாகீரதி பாட்டி. இது ஏதோ ஒரு காரணத்தால் கல்வியை தொடர முடியாமல் இடைநின்ற பல மாணவர்களையும், தற்போது பள்ளியில் படித்து வரும் குழந்தைகளையும் ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது என்று சமூகவலைதளங்களில் பகிரப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x