Published : 06 Feb 2020 07:14 PM
Last Updated : 06 Feb 2020 07:14 PM

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் திடீர் மாற்றம்; தீரஜ் குமார் நியமனம்

பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் மாற்றப்பட்டு, புதிய முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். இதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 37,211 அரசுப் பள்ளிகளும் 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளை ஆய்வு செய்ய 32 முதன்மைக் கல்வி அதிகாரிகள், 117 மாவட்டக் கல்வி அதிகாரிகள், 413 வட்டாரக் கல்வி அதிகாரிகள் உள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறையின் கீழ் தொடக்கக்கல்வி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அரசு தேர்வுத் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், தமிழ்நாடு பாடநூல் கழகம், நூலகத் துறை என 10 இயக்குநரகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு தலைமை அதிகாரிகளாக ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்றனர். நிர்வாக ரீதியில் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித்துறையின் தலைமை அதிகாரியாக அத்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் இருந்தார்.

இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறையில் புதிதாக ஒரு பதவி உருவாக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறை ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் திடீரென மாற்றப்பட்டு, தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறைச் செயலராக இருந்தவர் தீரஜ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பதில் பிரதீப் யாதவ் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது பிரதீப் யாதவ் மாற்றம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிரதீப் யாதவ் கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x