Published : 06 Feb 2020 10:37 AM
Last Updated : 06 Feb 2020 10:37 AM

செய்திகள் சில வரிகளில்: காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பரம்போரா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 3 தீவிரவாதிகள், அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

சிஆர்பிஎப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றொரு தீவிரவாதி பிடிபட்டுள்ளார்.

விசாரணையில், தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே, இந்த மோதலின்போது ராஜீவ் ரஞ்சன் என்ற சிஆர்பிஎப் வீரர் உயிரிழந்தார்.

தெலங்கானாவில் பெரிய அளவிலான பழங்குடியினர் திருவிழா

ஹைதராபாத்

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடரம் கிராமத்தில் மிகப்பெரிய அளவிலான பழங்குடியினர் திருவிழா நேற்று தொடங்கியது.

சம்மக்கா-சரலம்ம ஜதாரா என்ற பழங்குடியின தெய்வங்களை வழிபடும் இந்த திருவிழாவுக்கு, மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து சுமார் ஒரு கோடிக்கு மேலான பழங்குடியின மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தேவையான வசதிகளை செய்ய மாநில அரசு ரூ. 75 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.

அரசு பள்ளிகளில் தேசபக்தி பாடத்திட்டம்: ஆம் ஆத்மி புதிய வாக்குறுதி

புதுடெல்லி

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 8-ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் கட்சியான ஆம் ஆத்மி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் டெல்லியின் அடுத்த 5 ஆண்டுக்கு தேவையான வளர்ச்சிக்காக தடையில்லா மின்சாரம், சுத்தமான குடிநீர், தரமான கல்வி வழங்கப்படும்.

மாணவர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் விதமாக ‘தேசபக்தி பாடத்திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க தேவையான ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள் வரும் கல்வியாண்டில் தொடங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் பணியில் இருக்கும்போது இறந்தால் அவர்கள் குடும்பத்துக்கு ரூ 1.கோடி நிவாரணம் வழங்கப்படும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை ஆம் ஆத்மி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஜம்முவில் தடுப்பு காவலில் இருந்த 2 அரசியல் தலைவர்கள் விடுவிப்பு

ஜம்மு/புதுடெல்லி

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டபோது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அவர்கள் அவ்வப்போது விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மூத்த அரசியல்வாதியும் மக்கள் மாநாடு கட்சியின் தலைவருமான சஜ்ஜத் லோனே, மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் வாஹீத் பாரா ஆகிய இருவரும் நேற்று விடுவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே தடுப்பு காவல் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கூறுகையில், “ பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஜம்மு- காஷ்மீரில் 389 பேர் தடுப்பு காவலில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x