Published : 06 Feb 2020 08:43 AM
Last Updated : 06 Feb 2020 08:43 AM

கல்வியால் மட்டுமே வாழ்வில் உயர்வடைய முடியும்: விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அறிவுரை

கோபி அருகேயுள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பவள விழாவில், சிறந்த மாணவ, மாணவிகளுக்கு, சிறப்பு விருந்தினர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பரிசு வழங்கினார். அருகில் தலைமை ஆசிரியை ரமாராணி உள்ளார்.

நாமக்கல்

கோபி அருகே உள்ள கூகலூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பவளவிழா நடைபெற்றது. இவ்விழாவில், இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குநரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதாவது:

செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியதில் சீனா, ஜப்பான் இதுவரை வெற்றி பெறவில்லை. ஆனால் நாம் எடுத்த முதல் முயற்சியிலேயே ஒன்பதே மாதங்களில் வெற்றிபெற்றுள்ளோம். நாம் படித்தது தாய் வழிக்கல்வி என்றாலும் நம்மால் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற முடிந்தது. மாணவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். முன்னேறவேண்டும் என்றுமனதில் நினைத்துக் கொண்டு முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 2020-ல் இந்தியா வல்லரசு ஆகவேண்டும் என நினைத்தார். உலக அளவில் இந்தியா 5-ம் இடத்திற்குள் வரவேண்டும் என்று நினைத்தார். இந்த இலக்கு கடந்த ஆண்டே நிறைவேறியுள்ளது. நீங்கள் வளரும் போது பெற்றோர், உறவினர் என அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். வாழ்வில் உயர்வடைய வேண்டும் என்றால் கல்வி ஒன்றால் மட்டுமே முடியும். இவ்வாறு மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.

தொடர்ந்து சிறந்த மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கும், பள்ளியை மேம்படுத்த நிதியுதவி அளித்தவர்களுக்கும் சிறப்பு பரிசு வழங்கி பாராட்டினார். விழாவில் அந்தியூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x