Published : 06 Feb 2020 08:50 AM
Last Updated : 06 Feb 2020 08:50 AM

பிப். 5 உலக உரக்க வாசிப்பு தினத்தை முன்னிட்டு சத்தமாக வாசிப்பதை ஊக்குவிக்கும் யூடியூப் சேனல்: பாடப்புத்தகத்தை விடவும் கதை படிக்க விரும்பும் 77 % குழந்தைகள்

ஆண்டுதோன்றும் பிப்ரவரி 5-ம் தேதி உலக உரக்க வாசிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளை சிறப்பிக்கும் விதமாக ஸ்காலஸ்டிக் இந்தியா என்ற நிறுவனம் யூடியூப் சேனல் ஒன்றை நேற்றுத் தொடங்கியது. புதிய தலைமுறை வாசிப்பாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் இந்த யூடியூப் சேனல் தொடங்கப்பட்டு இருக்கிறது.

உரக்க வாசித்தலை ஊக்குவிக்கும் தங்களுடைய யூடியூப் சேனல் குறித்து ஸ்காலஸ்டிக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நீரஜ் ஜெயின் கூறுகையில் ”வாசிப்பு பழக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் சத்தமாக வாசிக்கும் பழக்கமானது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அதிகம் உதவும். இந்த அடிப்படையில் நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கதை சொல்லிகள் எங்களுடைய யூடியூப் சேனலில் சத்தமாக கதைகளை வாசிப்பார்கள்.

இந்த சேனல் நிச்சயம் குழந்தைகளுக்கு ஓர் வரப்பிரசாதம். ஏனென்றால் ஒரு சிறந்த புத்தகத்தை வாசிக்க நேரிடும் போது ஒரு குழந்தை வாசிப்பில் லயித்து தன்னுடைய வாழ்நாள் முழுவதும் வாசிப்பில் ஈடுபடும். வாசித்தல் தன்னம்பிக்கை அதிகரிக்க கைகொடுக்கும், எழுத்தறிவு திறன் அதிகரிக்க உதவும் மொத்தத்தில் படிப்பில் மாணவர்கள் சிறக்க பேருதவியாக இருக்கும்” என்றார்.

இந்த யூடியூப் சேனலை தொடங்குவதற்கு முன்னதாக ஸ்காலஸ்டிக் இந்தியா நிறுவனம் குழந்தைகள் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது. அதில் பங்கேற்ற குழந்தைகளில் 77 சதவீதத்தினர் பாடபுத்தகங்களை விடவும் கதை புத்தகங்களை வாசிப்பதை மிகவும் மகிழ்ச்சியான செயல்பாடாக கருதுவதாகத் தெரிவித்துள்ளனர். தங்களுடைய குழந்தைகள் சத்தமாக வாசிப்பதை 91 சதவீத பெற்றோர் மொழி திறன் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாகக் கருதுவதாக தெரிவித்துள்ளனர்.

0-5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தாங்கள் உரக்க வாசிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு எழுத்துக்கள், சொற்கள் பயிற்றுவிக்க முயல்வதாக தெரிவித்துள்ளனர். அதன் மூலம் குழந்தைகள் நாளடைவில் புத்தக வாசிப்பில் ஆர்வத்துடன் ஈடுபட வாய்ப்பிருப்பதாக நம்புவதாகவும் கூறியுள்ளார். இந்த கணக்கெடுப்பில் பங்கேற்றகுழந்தைகளில் 85 சதவீதத்தினர் தங்களிடம் யாராவது சத்தமாக புத்தகங்களை வாசித்தால் மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

ஸ்காலஸ்டிக் இந்தியா நிறுவனம் தொடங்கி இருக்கும் யூடியூப் சேனலில் புத்தக வாசிப்பைத் தவிரவும் வேறு சில செயல்பாடுகளும் உள்ளன. ஒவ்வொரு வீடியோ பதிவுடன் செயல்பாட்டு தாள் (activity sheet) காணப்படும். ஏற்கெனவே பார்த்த காணொலியை அடிப்படையாக வைத்துக் கலந்துரையாடும் விதத்தில் இது வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை பதிவிறக்கி குழந்தைகள் பயனடையலாம். இரண்டு வாரத்துக்கு ஒரு முறை இந்த சேனலில் புதிய காணொலிகள் பதிவேற்றப்படும்.

காணொலி காண: https://bit.ly/2S0XkEt

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x