Published : 05 Feb 2020 09:00 AM
Last Updated : 05 Feb 2020 09:00 AM

கரோனா வைரஸ் காரணமாக சுற்றுலாத்துறை கடும் பாதிப்பு: கேரளா மாநில அமைச்சர் தகவல்

கோப்புப்படம்

திருவனந்தபுரம்

சீனாவின் வூஹான் நகரத்தில் இருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து கேரளா திரும்பிய ஒரு பெண் உட்பட 3 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 3 பேரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையில், மருத்துவ அவசரநிலையை கேரள அரசு நேற்று முன்தினம் அறிவித்தது.

இதுதொடர்பாக கேரள சட்டபேர வையில் எதிர்கட்சியினர் நேற்று கேள்வி எழுப்பினர். இதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பதிலளித்து பேசியதாவது:

கரோனா வைரஸ் சுற்றுலாத்துறை பாதிக்க தொடங்கியுள்ளது. கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரளாவுக்கு பிப்ரவரி- மார்ச் மாதம் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதற்காக பல்வேறு பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளை முன்பதிவுச் செய்து வைத்திருந்தனர்.

தற்போது கரோனா வைரஸ் குறித்து வரும் செய்திகளால் முன்பதிவு செய்யப்பட்ட விடுதியை சுற்றுலா பயணியர்கள் மொத்தமாக ரத்து செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் நிபா வைரஸ், வெள்ளத்தின் போது கேரளா சுற்றுலா துறைக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதுபோன்ற பேரழிவு காலங்களில் ஊடகங்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்கவேண்டும். தவறான கருத்துக்களால் தங்களை தாங்களே பயமுறுத்தி கொள்ளவேண்டாம். கேரளாவுக்கு 2019-ம் ஆண்டு மொத்தம் 8.19 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். இது 2018-ம் ஆண்டில் 10.96 லட்சமாக இருந்தது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x