Published : 05 Feb 2020 08:12 AM
Last Updated : 05 Feb 2020 08:12 AM

அழுத்தம் இல்லாத தேர்வு வேண்டும்!

நடப்பாண்டில் நடைபெறுவதாக இருந்த 5, 8-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அறிவித்துவிட்டது. இது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர், பெற்றோர் எல்லோரையும் பெருமூச்சு விட வைத்திருக்கிறது. சொல்லப்போனால் தேர்வழுத்தம் என்பது மாணவர்களுக்கு தானாக தோன்றுவதில்லை. அதை பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வித் துறையும் தான் மாணவர்களிடம் திணிக்கிறார்கள்.

குழந்தைகளின் எதிர்காலத்தை பிரகாசமாக்கும் நல்லெண்ண அடிப்படையில்தான் தேர்வுகள் நடத்தப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இருந்தாலும் நாம் நினைப்பதற்கு நேரெதிரான பாதகமான விளைவைத் தேர்வுகள் ஏற்படுத்தி வருவதை கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம். அதிலும் பொதுத் தேர்வு என்று சொல்லும் போதே அந்த சொற்கள் கனமாகி விடுகின்றன.

கடந்த காலத்தில் பொதுத் தேர்வுகள் பல துளிர்களை பலி கொண்டிருக்கின்றன. ஆகையால் பொதுத் தேர்வு என்பது மாணவர்களை தகுதி வாய்ந்தவர்களாக மாற்றும் திட்டம் என்பதாக மட்டுமே பார்க்கக்கூடாது என்பதை தற்போது ராஜஸ்தான் மாநிலமும் உணர்ந்திருக்கிறது. ஆகவேதான் ராஜஸ்தான் மாநில குழந்தை உரிமைபாதுகாப்பு கமிஷன் பெற்றோருக்கும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் நேற்று முந்தைய தினம் ஓர் எச்சரிக்கை மணியை அடித்தது.

தேர்வு ஏற்படுத்தும் அழுத்தத்தினால் தற்கொலை என்ற எல்லைக்கு மாணவர்கள் தள்ளப்படாமல் இருக்க அவசரகால அடிப்படையில் பெற்றோரும் கல்வித் துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சங்கீதா பனிவால் வலியுறுத்தியுள்ளார். குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுத்தாக வேண்டும் என்று பெற்றோர் வற்புறுத்தக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

தேர்வு அச்சத்தை போக்க அம்மாநிலத்தின் 10 மாவட்டங்களில் கல்வி அதிகாரிகள் சிறப்பு பயிலரங்கம் நடத்தவிருப்பதாக தெரிவித்துள்ளார். பள்ளித் தேர்வில் மனித உரிமை அமைப்புக்கு என்ன வேலை என்று கேட்கலாம். தேர்வு என்பது குழந்தைகளின் தனித்துவத்தை வெளிக்கொணரும் செயல்பாடாக இல்லாமல் அவர்களைத் துன்புறுத்தும் திட்டமாக மாறி இருப்பதைத்தான் இது காட்டுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x