Published : 04 Feb 2020 12:21 PM
Last Updated : 04 Feb 2020 12:21 PM

குட்டிக் கதை 22: 'ஓ' போடு!

“வருத்தப்படாதடா, எல்லாம் சரியாயிடும், நம்பிக்கையோடு இரு, எப்படியும் நம்ம டீம் தான் ஜெயிக்கப் போகுது, பார்த்துகிட்டே இரு”

“சூப்பரா விளையாடற நம்ம கேப்டன் அனுராஜ் இல்லையேடா,அதான் கவலையா இருக்கு. அது சரி, அனுராஜுக்கு என்னதான் ஆச்சு?”

வருண் இப்படி கேட்டதும் “அதான்டா எங்களுக்கும் தெரியல, நேத்து சாயந்தரம்கூட பிராக்டீஸ் பண்ணிட்டு தான் போனான், ஆனா இன்னிக்கு அனுராஜ் ஸ்கூலுக்கு வரலை, என்ன ஆச்சுன்னு அனுராஜ் வீட்டுக்குப் போய் பார்த்தோம், ஆனா வீடு பூட்டி இருக்கு, அதான் ஒரே கவலையா இருக்கு, அனுராஜ் இல்லாம நம்மால ஜெயிக்கவே முடியாதுடா”

“ஆமாடா, கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல படிக்கற பசங்கதானேன்னு மொதல்ல நம்மை எவ்ளோ கேவலமா நினைச்சாங்க. ஆனா நம்ம அனுராஜ் சூப்பரா விளையாடறதப் பார்த்து, மத்த ஸ்கூல் டீம்லாம் எவ்வளவு பயந்தாங்கன்னுத்தான் தெரியுமா? நாளைக்கு அனுராஜ் மட்டும் வரலைனா நம்மால எப்படி ஜெயிக்க முடியும்னு தெரியல”

மறுநாள் ஃபைனல் மேட்ச். அந்த மேட்ச் நடக்கும் இடத்தில் எல்லோரும் பரபரப்போடு இருந்தனர். அனுராஜ் டீமில் இருந்தவர்கள் திறமையான கேப்டன் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

எப்படியும் தாங்கள்தான் ஜெயிக்கப் போகிறோம் என்று எதிர் அணியினர் சந்தோஷத்தோடு சிரித்துக் கொண்டிருந்தனர்.

“கண்டிப்பா நாமதான் வின் பண்ணப் போறோம்” எதிரணி கேப்டன் ராக்கி சொன்னான்.

“அனுராஜ் வந்தா அவன் டீம்தான் ஜெயிக்கும், ஆனா இந்த அனுராஜுக்கு என்ன ஆச்சுன்னு தெரிலயே”

“ஹஹஹா.. நான்தான் ஆளை வச்சு அவனை கடத்திட்டுப் போய் ஒரு இடத்தில அடச்சு வச்சிருக்கேன், இப்போ நாம் ஜெயிச்சதும் அவனை விடச் சொல்லிடலாம்”

“ஓ! அப்படியா, அதானாலதான் இவ்வளவு தைரியமா சொல்றியா?”

“ஆமாம்” என்று கூறி அனைவரும் சிரித்தனர்.

“இன்னும் சற்று நேரத்தில் ஃபுட்பால் ஃபைனல் மேட்ச் தொடங்க இருப்பதால் இரு அணியினரும் உடனடியாக பிளே கிரவுண்டுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்ற அறிவிப்பைக் கேட்டு அனைவரும் பரபரப்போடு கிரவுண்டுக்கு வந்தனர்.

“கேப்டன் அனுராஜ் மற்றும் கேப்டன் ராக்கி இருவரும் உடனே இங்கு வரவும்” என்ற அறிவிப்பைக் கேட்டு ராக்கி அணியினர் சிரித்தனர்.

“டேய், அனுராஜ் வரலையே, இப்போ நாம என்ன பண்றது?” என்று வருத்தப்பட்டுப் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று அனுராஜ் அங்கே வந்தான்.

“டேய், நேத்துல இருந்து ஆளையே காணலையே, உனக்கு என்ன ஆச்சி?”

“அதெல்லாம் அப்பறம் பேசிக்கலாம், வாங்க, இப்போ நாம போய் விளையாடலாம்”

அனுராஜ் திரும்பி வந்தவுடன் ராக்கி அணியினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பயந்ததற்கு ஏற்ப அனுராஜ் அணியினர் மிகச் சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றனர்.

என்ன நடந்தது என்று அனுராஜிடம் எல்லோரும் கேட்டனர்.

“நேத்து காலைல நான் ஸ்கூலுக்கு வந்துட்டிருந்தேன். ஒரு பைக்ல வந்த யாரோ ரெண்டு பேர் என் மேல ஸ்பிரே அடிச்சாங்க, நான் மயக்கமாயிட்டேன், அதுக்கப்பறம் எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல, ரொம்ப நேரம் கழிச்சி எனக்கு மயக்கம் தெளிஞ்சதும் ஒரு பாழடைஞ்ச பங்களாவில என்னைக் கட்டிப் போட்டு வெச்சிருக்காங்கன்னு புரிஞ்சது ” என்றான் அனுராஜ்.

“அய்யோ, அப்பறம் எப்படி தப்பிச்ச?”

“அந்த ரெண்டு பேரும் ஏதோ மும்முரமா பேசிக்கிட்டு இருந்தாங்க, என் பக்கத்தில ஒரு வேஸ்ட் பேப்பர் இருந்துச்சி, அங்க இருந்த ஒரு கரித்துண்டால அந்த பேப்பர்ல காலாலயே இப்படி படம் போட்டு ஃபுட் பால உதைக்கற மாதிரி காலாலயே ஜன்னல் வழியா உதைச்சேன், அதை பார்த்த ஒருத்தர் போலீசோட வந்து என்னை காப்பாத்திட்டார் “

“ஆமாடா, அனுராஜ்தான் காலால நல்லா ஓவியம் வரைவானே, அது இல்லாம ஃபுட்பால் எக்ஸ்பர்ட் ஆச்சே, அதான் காலாலயே எல்லாம் செய்திருக்கான்”

“அது சரி, ஹெல்ப் அப்படின்றதுக்கு இதான் குறியீடா?”

“இதுவும் ஒரு குறியீடுதான்”

“எப்படியோ சரியான நேரத்தில, சரியா செயல்பட்டு தப்பி வந்ததோடு ஃபைனஸ் மாட்ச்சிலயும் ஜெயிக்க வெச்ச அனுராஜுக்கு ஒரு ‘ஓ’ போடுங்க” என்றதும் அனைவரும் ‘ஓ’என்று சொல்லி சந்தோஷத்தோடு கை தட்டினர்.

நீதி: தளராத மனதோடு, விடாமுயற்சி செய்தால் எந்த சூழலிலும் வெற்றி நிச்சயம்.

- கலாவல்லி அருள், தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி, திருக்காலிமேடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x