Published : 03 Feb 2020 06:22 PM
Last Updated : 03 Feb 2020 06:22 PM

பள்ளிகளில் சூழல் மன்றங்கள் அமைக்க உத்தரவு: மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை

மதுரை

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (தொடக்கநிலை/இடைநிலை) சார்பில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றம் (Youth & Eco Club) நடப்பு கல்வியாண்டில் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநர், தமிழகம் முழுவதுமுள்ள மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் வளர்ச்சியிலும், சமுதாய மேம்பாட்டிலும் சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பது அவசியம்.

மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து, சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பசுமையான சூழலை மாணவர்கள் மூலமாக உருவாக்கவும் இம்மன்றங்களை அமைக்க வேண்டும்.

தொடக்கப்பள்ளிகளில் 3 முதல் 5-ம் வகுப்பு மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்புகளில் ஊக்கத்துடன் செயல்படும் 5 மாணவ, மாணவியர் குழு ஏற்படுத்த வேண்டும். உயர்நிலைப்பள்ளிகளில் 8 முதல் 10-ம் வகுப்பு, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பில் 15 மாணவ, மாணவியர் குழு ஏற்படுத்த வேண்டும்.

இம்மன்றத்திற்கு ஆசிரியர்களை தெரிவு செய்து சுழற்சி முறையில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்க வேண்டும். இம்மன்றத்தில், இலக்கியப்பிரிவு, கலை கலாச்சாரப் பிரிவு மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரப் பிரிவு என்ற 3 குழுக்களை ஏற்படுத்தி தலைவர், செயலர்களைத் தேர்வு செய்ய வேண்டும். இலக்கியப்பிரிவில் கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி கவிதைப்போட்டிகளை நடத்த வேண்டும்.

மொழி மன்றங்களை உருவாக்கிப் பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன்களை மேம்படுத்துதல், மாணவர்களிடையே
நல்லொழுக்கங்களை வளர்த்தல் வேண்டும்.

மேலும், பள்ளிகளில் சுற்றுச்சூழல் சார்ந்த கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, பட்டிமன்றம், கவிதைப்போட்டி, நாடகம், பாட்டு, விளையாட்டுப்போட்டி ஆகியவற்றை நடத்தி மாணவர்களிடையே கல்வி சார்ந்த செயல்பாடுகளை வளர்த்தல் வேண்டும்.

மேலும், மரக்கன்று நடுதல், மூலிகைத்தோட்டம் அமைத்தல், உரம் புழுக்கள் உருவாக்குதல், தோட்டங்களை உருவாக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழகம் முழுவதும் தொடக்கப்பள்ளிகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 24250 பள்ளிகளுக்கு 1212.5 லட்சங்கள்,
நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ. 15 ஆயிரம் வீதம் 7043 பள்ளிகளுக்கு 1056.45 லட்சங்கள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
களுக்கு ரூ. 25 ஆயிரம் வீதம் 6065 பள்ளிகளுக்கு 1516.25 லட்சங்கள் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x