Published : 03 Feb 2020 10:55 AM
Last Updated : 03 Feb 2020 10:55 AM

இந்திய கிரிக்கெட் வரலாறு: சச்சின் சகாப்தம் ஆரம்பம்

பி.எம்.சுதிர்

1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க அணியாகஇந்தியா உருவெடுத்தது. உலகக் கோப்பையை வென்றதுடன் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி மகுடம் சூட, அதன் மதிப்பு இன்னும் கூடியது.

இந்த காலகட்டத்தில் இந்தியஅணியின் முக்கிய தளபதிகளாககபில்தேவும், கவாஸ்கரும் விளங்கினர். எதிரணி பந்துவீச்சாளர்கள் எல்லோரும் பயப்படும் அளவுக்கு பேட்டிங்கில் ஜாம்பவானாகதிகழ்ந்த சுனில் கவாஸ்கர்,டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம்ரன்களைக் குவித்த முதல் வீரர்என்ற சாதனையை படைத்தார்.

கவாஸ்கரின் இந்த சாதனைகளைப் பாராட்டி அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. பேட்டிங்கில் கவாஸ்கருக்கு துணையாக ஸ்ரீகாந்த், வெங்சர்க்கார், மொகிந்தர்அமர்நாத், முகமது அசாருதீன் ஆகியோரும் இந்த காலகட்டத்தில் வெளுத்து வாங்கினர்.

ஒரு காலத்தில் கவாஸ்கரின் பேட்டிங்கைப் பார்ப்பதற்காகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து பார்த்தவர்கள் உண்டு.1987-ம் ஆண்டில் கவாஸ்கர் ஓய்வு பெற்றதும், அவர்களில் பலர் கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதையே தவிர்த்தனர். இப்படி டெஸ்ட் போட்டிகளை பார்ப்பதை விட்டவர்களை மீண்டும் கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்க தூண்டுவதற்காகவே ஒரு இளம் சிங்கம் இந்திய அணிக்குள் நுழைந்தது. அந்த சிங்கத்தின் பெயர் சச்சின் டெண்டுல்கர்.

1989-ம் ஆண்டு கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 16 வயது சிறுவனாக களம் புகுந்தார் சச்சின் டெண்டுல்கர். இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சச்சின் டெண்டுல்கர் வெறும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதனால் அவரையாரும் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை.

ஆனால் காலம் செல்லச்செல்ல இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக மாறத் தொடங்கினார் சச்சின். சச்சினைச் சுற்றி சவுரவ் கங்குலி, சித்து,சஞ்சய் மஞ்ச்ரேக்கர், வினோத் காம்பிளி என்று இந்திய பேட்டிங்கின்புதிய தலைமுறை தலையெடுத்து வந்தது.

அப்போதும் அணியில் தொடர்ந்திருந்த கபில்தேவ், அந்த புதியதலைமுறைக்கு தனது அனுபவ பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். அணிக்கு அசாருதீன் கேப்டனாக இருந்தபோதிலும், ஒரு ஓரத்தில் தளபதியாய் இருந்து இளம் வீரர்களுக்கு வழிகாட்டினார். இந்த காலகட்டத்தில் டெஸ்ட் போட்டிகளில் 434 விக்கெட்களை வீழ்த்திய கபில்தேவ், டெஸ்ட் உலகில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

அந்தப் பெருமையுடன் கிரிக்கெட் உலகில் இருந்து 1994-ம் ஆண்டில் விடை பெற்றார்.யாரும் கவனிக்காமல் ஒரு ஓரத்தில் இருந்த இந்திய கிரிக்கெட்அணியை, அனைவரையும் கவனிக்கச் செய்த வீரரான, அணித்தலைவரான கபில்தேவின் சகாப்தம் முடிவுக்கு வந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x