Published : 03 Feb 2020 10:50 AM
Last Updated : 03 Feb 2020 10:50 AM

செய்திகள் சில வரிகளில்: பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கும் எஸ்பிஜி படைக்கு ரூ.600 கோடி நிதி

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு வழங்கி வரும் சிறப்புப் பாதுகாப்பு படையினருக்கு (எஸ்.பி.ஜி) மத்திய பட்ஜெட்டில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.நாட்டிலேயே பிரதமர் மோடிக்கு மட்டுமே எஸ்பிஜி படை சிறப்பு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

2020-21-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படைப்பிரிவுக்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

எஸ்பிஜி படைக்கு நடப்பு நிதியாண்டுக்கு ரூ.540 கோடி கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கூடுதலாக ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்பாக ரூ.420 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.இந்தியாவில் சிறப்புப் பாதுகாப்புக் குழு (எஸ்.பி.ஜி) 1985 ஆண்டு மார்ச் 30-ல் உருவாக்கப்பட்டது. எஸ்பிஜி வீரர்களுக்கு மேற்கத்திய உடைகள் சீருடையாக உள்ளது. ஆயுதம், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள், உயர்ரக பாதுகாப்பு வாகனங்களை கொண்டு பிரதமரை எஸ்பிஜி குழு பாதுகாத்து வருகிறது.

காஷ்மீர் மருத்துவ கல்லூரிகளுக்கு தலா ரூ.32.40 கோடி நிதி ஒதுக்கீடு

ஜம்மு

ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தலா ரூ. 32.40 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு (இ.டபுள்யூ.எஸ்) கடந்த ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் இ.டபுள்யூ.எஸ் திட்டத்தை அமல்படுத்துவதற்காக தலா 30 இடங்கள் கூடுதலாக அமைக்கப்படவுள்ளன.

இதற்காக, 2 அரசு மருத்துவ கல்லூரிகளுக்கும் தலா ரூ.32.40 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள நிதியின் மூலம் கல்லூரிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை இந்திய மருத்துவ கவுன்சில் (எம்சிஐ) விதிமுறைகளை பின்பற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x