Published : 03 Feb 2020 10:25 AM
Last Updated : 03 Feb 2020 10:25 AM

உயர்கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

உயர்கல்விக்காக அமெரிக்க கல்லூரிகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சீனா, தென் கொரியாவை விட அதிகரித்துள்ளது. அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையின் கீழ் செயல்படும் மாணவர் பரிவர்த்தனை பார்வையாளர் திட்டம் சார்பில், உயர்கல்விக்காக அமெரிக்க கல்லூரிகளுக்கு வரும் வெளிநாட்டு மாணவர்களின் விவரம் என்ற புள்ளிவிவர பட்டிடல் ஆண்டுதோறும் வெளியிடப்படும். அதன்படி, 2018-ம் ஆண்டில் உயர்கல்விக்காக அமெரிக்காவுக்கு வந்த வெளிநாட்டு மாணவர்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது:

உயர்கல்விக்காக சீனா, இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிகப்படியாக அமெரிக்காவுக்கு வருகின்றனர். அதற்கு அடுத்தப்படியாக சவுதி அரேபியா, ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. 2018-ம் ஆண்டில் சீனாவில் இருந்து 4 லட்சத்து 78 ஆயிரத்து 732 மாணவர்களும், இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 51 ஆயிரத்து 290 மாணவர்களும் தென்கொரியாவில் இருந்து 88,867 பேரும், சவுதி அரேபியாவில் இருந்து 61,205 பேரும், ஜப்பானில் இருந்து 39,396 பேரும் அமெரிக்காவுக்கு வந்துள்ளனர்.

2017-ம் ஆண்டில், சீனா இருந்து 4 லட்சத்து 78,879-ம், இந்தியாவில் இருந்து 2 லட்சத்து 47,133-ம், தென் கொரியாவில் இருந்து 95,270, சவுதி அரேபியாவிலிருந்து 72,084, ஜப்பானி லிருந்து 41,534 என்ற எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு வந்திருந்தனர். அதன்படி, இந்தியாவில் இருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை தான் கணிசமாக உயர்ந்துள்ளது. அதாவது, 2017-ம் ஆண்டை விட 2018-ல் கூடுதலாக 4,157 இந்திய மாணவர்கள் அமெரிக்கா வந்துள்ளனர்.

சீனாவில் இருந்து 147 மாணவர்களும், தென் கொரியாவில் இருந்து 6,403-ம், சவுதி அரேபியாவில் இருந்து 10,879-ம், ஜப்பானில் இருந்து 2,134-ம் மாணவர்கள் வருகை குறைந்துள்ளன. இந்தியாவில் இருந்து அமெரிக்கா வரும் மாணவர்கள், அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பிரிவுகளைத்தான் அதிகமாக தேர்வு செய்து படிக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x