Published : 03 Feb 2020 09:50 AM
Last Updated : 03 Feb 2020 09:50 AM

எல்ஐசி, இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை, `இந்து தமிழ் திசை' இணைந்து நடத்திய `அறிவியல் விநாடி-வினா' போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

எல்ஐசி, இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை, `இந்து தமிழ் திசை' சார்பில் கோவை எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த `அறிவியல் விநாடி-வினா' போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கிய எல்ஐசி கோட்ட விற்பனை மேலாளர் டி.கிரிமாணிக்கவாசகம், துணை மேலாளர் வெங்கடாசலம், எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியின் செயலர் எஸ்.மோகன்தாஸ், ஃபிட்ஜி மெடிக்கல் துணை பொது மேலாளர் கார்த்திகேயன், `இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன். (அடுத்த படம்) போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி), இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபை மற்றும் `இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் கோவையில் நடந்த `அறிவியல் விநாடி வினா-2020’ போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவ, மாணவிகள் இடையே அறிவியல், தொழில்நுட்ப ஆர்வத்தை அதிகரிக்கவும், விஞ்ஞான அறிவை மேம்படுத்தவும் உதவும்வகையில் `அறிவியல் விநாடி வினா-2020’ போட்டி நடத்தப்பட்டது.

கோவைபட்டணம் வைகை நகரில் உள்ள எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தப் போட்டியில், கோவை, ஈரோடு, நீலகிரி,சேலம், திருப்பூர், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 40 பள்ளிகளில் இருந்து 6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 170-க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு அணியிலும் 3 மாணவ, மாணவிகள் இடம் பெற்றிருந்தனர். கோவை குயிஸ் சர்க்கிள் அமைப்பைச் சேர்ந்த குயிஸ் மாஸ்டர்கள் செந்தில், கோவிந்த் ஆகியோர் இந்த விநாடி-வினா போட்டியை நடத்தினர்.

பிஎஸ்பிபி மில்லினியம் முதலிடம்

இதில், கோவை பி.எஸ்.பி.பி. மில்லினியம் பள்ளியைச் சேர்ந்த அனீஷ்சாரதி, சுஜன், ஸ்ரீராம் ஆகியோர்முதலிடமும், கல்லாறு சச்சிதானந்தஜோதி நிகேதன் சர்வதேசப் பள்ளியைச் சேர்ந்த ரிஷான் டி.நரசிம்மன், ஆதித்ய குமரன், நவீன் சந்தர் ஆகியோர் இரண்டாமிடமும், கோவை சின்மயா வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா, அற்புதன், ராம் ரக்சனேஷ்வர் ஆகியோர் மூன்றாடமும் பிடித்தனர். மேலும், 3 அணிகள் 3, 4, 5-ம் இடத்தைப் பிடித்தன. மண்டல அளவிலான இப்போட்டியில் வென்றவர்கள், சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான இறுதிப் போட்டியில் பங்கேற்பர். இதில் வெல்லும் அணியினர் ரஷ்ய விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

மண்டல போட்டியின் பரிசளிப்பு விழாவுக்கு எல்ஐசி கோட்ட விற்பனை மேலாளர் டி.கிரிமாணிக்கவாசகம் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.வி.எம்.வேர்ல்டு பள்ளியின் செயலர் எஸ்.மோகன்தாஸ், எல்.ஐ.சி. துணை மேலாளர் வெங்கடாசலம், ஃபிட்ஜி மெடிக்கல்துணை பொதுமேலாளர் கார்த்திகேயன், `இந்து தமிழ் திசை' ஆசிரியர் கே.அசோகன், பொதுமேலாளர் டி.ராஜ்குமார் ஆகியோர் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

இந்தியாவில் கலை சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ரஷ்ய தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் தங்கப்பன் மற்றும் ரஷ்ய நாட்டு கலைக் குழுவினர் இவ்விழாவில் பங்கேற்று, ரஷ்ய மொழியில் வாழ்த்து தெரிவித்தது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

விநாடி-வினா போட்டி குறித்து எல்ஐசி. கோட்ட விற்பனை மேலாளர்டி.கிரிமாணிக்கவாசகம் கூறும்போது,"மாணவ பருவத்திலேயே எதிர் காலத்தை தீர்மானித்துக்கொண்டு, இலக்குநோக்கி மாணவ, மாணவிகள் பயணிக்க வேண்டும். குறிப்பாக, அறிவியல் துறையில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு இதுபோன்ற போட்டிகள் மிகவும் உதவியாக இருக்கும். குறிப்பாக, விநாடி-வினா போட்டிகளுக்கு நிறைய புத்தகங்களைப் படித்து, தயார் செய்யும்போது, பொது அறிவு வளரும். யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். எனவேதான், இதுபோன்ற நிகழ்ச்சிகளி்ல் பங்கேற்க எல்ஐசி முழுமனதுடன் முன்வருகிறது" என்றார்.

எஸ்.எஸ்.வி.எம். வேர்ல்டு பள்ளியின் செயலர் எஸ்.மோகன்தாஸ் கூறும்போது, "அறிவியலும், தொழில்நுட்பமும்தான் நிகழ்காலத்தை மட்டுமின்றி, எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளன. சிறு வயது முதலே குழந்தைகளுக்கு அறிவியல், தொழில்நுட்ப அறிவைக் கொடுப்பதும், ஊக்குவிப்பதும் அவசியமாகும். அந்த வகையில் இதுபோன்ற அறிவியல் விநாடி-வினா நிகழ்ச்சி மாணவ, மாணவிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.

குறிப்பாக, அரசு பள்ளி மாணவ, மாணவிகள் இதுபோன்ற ஊக்குவிப்புகள் மிகவும் அவசிய மாகும். மிகச் சிறப்பான முறையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததற்கு பாராட்டுகள்" என்றார்.

இந்த விநாடி-வினா போட்டியை ஃபிட்ஜீ மெடிக்கல், ஐயப்பா நெய், `ஏ.எம்.டபிள்யு. வெகே' சுற்றுலா நிறுவனம் ஆகியவை இணைந்து வழங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x