Published : 03 Feb 2020 08:06 AM
Last Updated : 03 Feb 2020 08:06 AM

உயர்கல்வியில் மாணவர்களை விட மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவை உறுப்பினர்கள் மத்தியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

உயர்கல்வி படிக்கும் மாணவர்களைவிட, மாணவிகளின் எண்ணிக்கை முதல் முறையாக உயர்ந்துள்ளது என்பதை நான் மிகப்பெருமையாக தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதையும் புதுமையான கண்டு பிடிப்புகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

உயர்கல்வி துறை மூலம் நாட்டில் 75 கல்வி நிறுவனங்களை நவீனமயமாக்க ரூ.37 ஆயிரம் கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்களையும், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களையும் அரசு நியமித்துள்ளது. இணையதளம் வாயிலாக கல்வி முறையை வலுப்படுத்த ‘சுயம் 2’ என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

தேசிய மருத்துவ ஆணையத்தை அமைப்பதன் மூலம், மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார சீர்திருத்தத்துக்கான தனது உறுதிப்பாட்டை மத்திய அரசு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் 75 புதிய மருத்துவக் கல்லூரிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக 16 ஆயிரம் மருத்துவ கல்வி இடங்கள் கிடைக்கும். இதில், முதுநிலை மருத்துவ படிப்பில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கும். அதேபோல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் 22 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு - காஷ்மீர், லடாக்கில் ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களை நிறுவும் பணிகளும் விரைவாக நடந்து வருகின்றன. சிறுபான்மை சமூகத்தின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்துக்காக அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. முஸ்லிம் மாணவர்கள் தங்களது கல்வியைத் தடையில்லாமல் தொடர ஏராளமான உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ராம்நாத் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x